களுத்துறையில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த அக்காவை தம்பி ஒருவர் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஒரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு துரத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் 3 நாட்களாக வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள பகுதியில் வசித்து வருகின்றார்.

தனது ஒரே சகோதரன் தன்னை இவ்வாறு வீட்டிற்கு அனுமதிக்காமையினால் அயலவர்களின் உதவியுடன் அவர் உயிர் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

அந்த பெண் தனது சகோதரனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அண்மையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10 நாட்கள் சிகிச்சை பெற்றவர் கடந்த 21ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தனது சகோதரன் கதவை திறக்காமையினால் வீட்டிற்கு வெளியே வெயில் மற்றும் மழையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் இறுதியாக சிகிச்சை பெற்ற போது அணிந்த ஆடையுடனேயே தற்போதும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடைகளை எடுப்பதற்கேனும் அறைக்குள் செல்ல தனது சகோதரன் அனுமதி வழங்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகள் வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்கு பணம் மற்றும் ஆடைகளை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் தனது சகோதரனிடம் கேட்டுக்கொண்ள்ளார்.

சுகாதார பரிசோதகர்கள் அவ்விடத்திற்கு வந்து அவர் மூலம் இனிமேல் கொவிட் தொற்றாதென்பதனை தெளிவுப்படுத்திய போதிலும் சகோதரன் அதனை நிராகரித்துள்ளார்.