இலங்கை அரசாங்கத்தின் கோவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கோவிட் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து கோவிட் தடுப்பு செயலணி தொற்று ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

செயலணிக்கூட்டம் நேற்று ஆரம்பமாகும் முன்னர் பந்துல குணவர்த்தன, அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை தேநீருக்காக சந்தித்ததாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

இதன்போது, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, தேநீர் அருந்தவில்லை என்றும் முகக்கவசம் அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

எனினும் அழகப்பெரும மற்றும் லலித் வீரதுங்க இருவரும், தேநீர் அருந்துவதற்காக முகக்கவசங்களை நீக்கினார்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கோவிட் செயலணிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது, பந்துல குணவர்தன சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் கெஹலிய ​​ரம்புக்வெல்ல இன்று என்டிஜென் சோதனை எடுத்ததாகவும், எனினும் முடிவு எதிர்மறையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரச் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முனசிங்க இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிலையில், அவரும் என்டிஜென் பரிசோதனையை மேற்கொண்டார்.

தற்செயலாக, அமெரிக்காவால் வழங்கப்பட்ட பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளை ஏற்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர், கெஹலிய ரம்புக்கவல இன்று கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.