Antoine FLAHAULT
உலகில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்படுமானால் மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தியை வெற்றிகரமாக அடைய முடியும். கொரோனாவின் உயிரிழப்புகளை பெரமளவில் குறைத்து விட முடியும். ஆனால் டெல்டா வகை திரிபுகளைப் பொறுத்தவரை அதன் இனப்பெருக்க வீதம் மற்றையவற்றை பார்க்கிலும் 8 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆகவே உலகில் 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் தொற்று மற்றும் உயிரிழப்பு அச்சுறுத்தலில் இருந்து உலக மக்கள் விடுபட முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார் சர்வதேச தொற்றுநோயியல் நிபுணரான அன்ரனி ப்ளாஹால்ட் (Antoine FLAHAULT) என்பவர். ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா வகை வைரஸால் உலகின் மக்கள்தொகையினரில் குறிப்பிட்ட சதவீதத்தினர் தமது உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான சாத்தியம் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதையும் அவர் இப்பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் உலகில் 90 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் கொரோனா தொற்று முடிவடைந்து விடும் என்றும் சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2019 இல் உருவான கொவிட் வைரஸின் அல்பா வகையை விட தற்போது உலகளவில் பரவி வரும் டெல்டா வகை 60 வீதம் அதிகம் பரவக் கூடியதாக உள்ளது. டெல்டா 2 மடங்கு அதிகம் தொற்று பாதிப்பை உண்டாக்குகிறது. தடுப்பூசிக்கும் இவ்வகை வைரஸ்கள் முழுமையாக கட்டுப்படுவதில்லை. அமெரிக்க அரசின் தகவலின்படி, டெல்டா வகை வைரஸிடமிருந்து பாதுகாப்பதில் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் திறன் 91 சதவீதத்திலிருந்து 66 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் சில ஆய்வுகள், தடுப்பூசிகளின் செயல்திறன் காலப்போக்கில் டெல்டா வகைக்கு எதிராக வீழ்ச்சியடைவதைக் காட்டுகின்றன.
உலக மக்கள் தொகை நோய்எதிர்ப்புத் திறன்தான் இங்கே முக்கியமானது. வைரஸ் பாதிப்பதாலோ அல்லது வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடுவதாலோ உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகின்றது. அவர்கள் நோய்க் கிருமியின் பாதிப்பை அடைய மாட்டார்கள். அவ்வாறானோர் மற்றையோருக்கு நோயைப் பரப்பும் சந்தர்ப்பமும் அரிதாகும். இதன் மூலம் நோய் பரவும் சங்கிலி உடைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவார்கள். இதனையே மக்கள்தொகை எதிர்ப்பாற்றல் என்கின்றது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய டெல்டா வகையால் இந்தப் பாதுகாப்பை மக்கள் பெறுவது சந்தேகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உலக மக்கள் தொகையில் 90 வீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டுமென சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு தொற்றுநோயியல் நிபுணர் அன்ரனி ப்ளாஹால்ட் தனது பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
“மக்களை வைரஸ் பாதிக்கும் போது மக்கள் தொகையினர் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றது. கொவிட் அசல் வைரஸைப் பொறுத்தவரை, அதன் இனப்பெருக்க வீதம் பூச்சியம் முதல் 3 ஆக இருந்தது. அதாவது தொற்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் மற்ற மூவருக்கு அதை கடத்துவர். அந்நிலையில் 66 வீதம் மக்களுக்கு தடுப்பூசி போட்டால் மக்கள் தொகை நோய் எதிர்ப்புசக்தியை அடைய முடியும். ஆனால் டெல்டா வகையில் இனப்பெருக்க வீதம் 8 ஆக உள்ளது. அதனால் 90 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்” எனக் கூறியுள்ளார் சர்வதேச தொற்றுநோயியல் நிபுணர் அன்ரனி ப்ளாஹால்ட்.
இதேவேளை உலக மக்கள்தொகையின் நோய் எதிர்ப்பாற்றல் தற்போதைய சூழலில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. எனவே தடுப்பூசி மூலம் எவ்வளவு பேரை பாதுகாக்க முடியுமோ அவ்வளவு பேரை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். இறுதியில், நிச்சயமாக, அனைத்து தொற்றுநோய்களும் முடிவடையும் என நம்பிக்கை அளிக்கின்றனர். தடுப்பூசி போட்டிருந்தாலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி பரிந்துரைக்கின்றனர்.
இணைந்திருங்கள்