மட்டக்களப்பிலிருந்து மாலைதீவுக்கு மணல் கடத்தப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்வதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள சுற்றாடற்துறை அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

மாலைத்தீவில் மற்றுமொரு தீவை உருவாக்குவதற்காக சில தரப்பினரால் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் கூறிய இராசமாணிக்கம் சாணக்கியன் கூறுகையில் ,

இன்று சுற்றாடற்துறை அமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினரான மஹிந்த அமரவீர பதவிவகித்து வருகின்றார். அவருக்குத் தெரியாமல் இந்த மணற்கொள்ளை இடம்பெற வாய்ப்புகள் இல்லை. அதேபோல கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக உள்ள அநுராதா யஹம்பத் தற்போதைய அரசாங்கத்தின் வியத்மக என்கின்ற அமைப்பின் முக்கிய பிரமுகர் ஆவார். அவரும் இந்த மணற்கொள்ளைக்கு அங்கீகாரம் அளித்திருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய பெரும்புள்ளியாக உள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதமரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும், மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழு தலைவராகவும் உள்ளார்.

ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த மணல் கொள்வனவு, போக்குவரத்து பற்றிய விடயதானங்கள் அதில் சேர்க்கப்படுவதில்லை. சேர்க்கப்பட்டாலும் நீக்கப்படுகின்றன.

நாங்கள் கேள்வி எழுப்புவோம் என்பதற்காக இவ்வாறான சூழ்ச்சிகளை செய்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவிலான மணல் ரயில்களிலும், டிப்பர் வாகனங்களிலும் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

அதனால் மட்டக்களப்பில் மணல் பாரிய கேள்வியாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மணல் விற்பனையாளர்கள் ஒரு டிப்பர் மணலுக்கு 30000 ரூபாவுக்குப் பதிலாக 65000 ரூபாவை கோருகின்றனர். கொழும்பில் பாரிய நிர்மாணப் பணிகளை சீன நிறுவனங்களே மேற்கொள்கின்றன.

அதோடு ஹம்பாந்தோட்டை துறைமுகமும் அவர்கள் வசமே உள்ள நிலையில், மட்டக்களப்பிலிருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக அல்லது கொழும்புக்கு கொண்டுசெல்லப்படுகின்ற மணல் மாலைதீவுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற சந்தேகம் இன்று உருவாகியுள்ளது.

இதுபற்றி அண்மையில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடந்த சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நான் நேரடியாகவே கடிதம் ஊடாக முறையிட்ட போதிலும் இன்றுவரை பதிலும் கிடைக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார்.