நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்ட பின்னர் ஜப்பானிய குடிவரவு அதிகாரிகள், சட்ட நடவடிக்கை எடுக்க போதிய நேரம் கிடைக்காமல் குறித்த இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இருவரும் 10 மில்லியன் யென் (ஜப்பான் நாணயம்) இழப்பீடு கோரி அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த தீர்ப்பானது உரிமைகோரல்களை நிராகரித்த கீழ் நீதிமன்ற முடிவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் அரசியலமைப்பின் பிரிவு 32 இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, குடிவரவு அதிகாரிகள் “விசாரணைக்கான உரிமையை மீறியுள்ளனர்” என்று தலைமை நீதிபதி யூதக ஹிரதா (Yutaka Hirata) கூறினார், அத்துடன், அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் மாநில சட்டத்தின் அடிப்படையில் “சட்டவிரோதமானது” எனவும், மொத்தம் 600,000 யென் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் வாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியின் கூற்றுப்படி, இவ்வாறான தீர்ப்பு இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டியுள்ளார். தீர்ப்பின் படி, இரண்டு பேரும் டிசம்பர் 2014 இல் டோக்கியோ பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தைப் பார்வையிட்டனர். அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் குடியேற்ற முகாமுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களின் அடுத்தடுத்த ஆட்சேபனையும் தள்ளுபடி செய்யப்பட்டது,

இதனால் இருவரும் முகாமுக்கு அனுப்பப்பட்ட மறுநாளே ஹனேடா விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த முடிவை இரத்துச் செய்ய வழக்குத் தாக்கல் செய்ய இருவரும் திட்டமிட்டிருந்தாலும், அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பே தங்கள் ஆட்சேபனை தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், வழக்குத் தொடுப்பதற்கு போதிய அவகாசம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குடிவரவு அதிகாரிகள் முடிவை அறிவித்த பின்னர் மூன்றாம் தரப்பினரை அணுக அனுமதிக்காமல் அவர்களை நாடு கடத்துவதன் மூலம் நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

அதிகாரிகள் இந்த விஷயத்தை கையாண்ட விதம் “அரசியலமைப்பை மீறிய” செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வாதிகள் இருவரும் தற்போது இலங்கையில் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தீர்ப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.