நாடாளுமன்றம் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளது.

24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடர்பான பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் முதலாவது அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 23ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 21ஆம் திகதி காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை குற்றவியல் நடைமுறைச் திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம் ஆகியவை விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

அதன்பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, தொழில் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு நேரத்தின் பிரேரணை அன்று மாலை 4.50 முதல் 5.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் மீதான விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அண்மைய மோதல்களின்போது படுகொலை செய்யப்பட்ட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் இரண்டாவது நாள் அனுதாப விவாதத்திற்கு எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரத்தை ஒதுக்குவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.