அரசியல் என்பது ஒரு வினோதம், எதிர்பாராததை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு தந்திரம். சில சமயம் இது நம்மை நம்ப வைத்து ஏமாற்றும், சில சமயம் நம்ப முடியாத சந்தோஷங்களை அள்ளித் தரும்.

தமிழக அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியலுக்கே வர மாட்டேன் என்பவர்கள் முழு நேர அரசியல்வாதிகளாக வலம் வருவதும், முழுமையான அரசியல்வாதி என நாம் எண்ணும் சிலர், அரசியலுக்கு முழுக்கு போட்டிவிட்டு செல்வதையும் நாம் ஏராளமாக பார்த்துள்ளோம்.

சமீப காலங்களிலும் அப்படிப்பட்ட பல நிகழ்வுகள் நம் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை என கூறிவிட்டு, பின்னர், மக்கள் மனங்களை உடைத்து மவுனமாகிவிட்ட பலர் இங்கு உண்டு. சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களில், இப்படிப்பட்ட பல எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் தமிழகம் கண்டது. 

தேர்தலுக்கு முன்னர் அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்களில் சசிகலாவும் (VK Sasikala) ஒருவர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்டது தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தேர்தலுக்கு முன்னர் தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக சசிகலா அறிவித்தார். இது பலருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பலரது வயிற்றில் பால் வார்த்தது. 

எனினும், அதன் பிறகும், பல தொண்டர்களை தொடர்பு கொண்டு, தான் விரைவில் கட்சியை கவனித்துக்கொள்ள வந்து விடுவேன் என்றும், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் மீண்டும் கட்சியை பழைய நிலைக்கு உயர்த்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக தொண்டர்களிடமும் சசிகலா தொலைபேசி மூலம் பேசி வந்தார். இதன் ஆடியோ பதிவுகளையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிக்ழவின் போது, வரும் 16ம் தேதி, சசிகலா, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் நினைவடங்களில் அஞ்சலி செலுத்தவுள்ளார். 

சசிகலா இந்த நினையவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்த உரிய பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளிலும், தொண்டர்களிடம் மேற்கொண்ட உரையாடல்களிலும், அதிமுக தொண்டர்களின் இயக்கம் என்பதை பலமுறை குறிப்பிட்டி பேசியுள்ளார். தொண்டர்களை கவனிக்காமல் நடந்துகொண்டால், அது கட்சியை பாதிக்கும் என்றும், தற்போது உள்ள கட்சி தலைமை, தொண்டர்களுக்கு ஏதுவான சூழலை அமைத்து தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உண்மையான அதிமுக (AIADMK) தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும், தான் விரைவில் வந்து அனைவரையும் சந்திப்பதாகவும், கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தப்போவதாகவும் அவர் பலமுறை கூறியுள்ளார். 

இதற்கிடையில், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலின் (Local Body Elections) முடிவுகள் வந்துவிட்டன. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது சசிகலா தன் எண்ணத்தையும் வருங்கால திட்டங்களையும் அறிவித்து வருவதும், தொண்டர்களின் ஆதரவை கோரி வருவதும், அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

சசிகலா மீண்டும் முழு முனைப்புடன் அரசியலில் இறங்குவதற்கான அறிகுறிகளாகவே அரசியல் நிபுணர்கள் இவற்றை பார்க்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, அதிமுக-வில் ஒரு வலுவான தலைமை இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில் உள்ளது. சசிகலாதான் அந்த வலுவான தலைமையா என்ற கேள்வி தற்போது பலரது மனதில் பெரிதாக ஒலிக்கத் துவங்கியுள்ளது.

மீண்டும் அரசியல் களத்தில் இறங்க தயார் ஆகிவிட்டாரா சசிகலா? அம்மா விட்டுச்சென்ற கட்சியை மீண்டும் சிகரம் தொட வைக்க சின்னம்மாவால்தான் முடியுமா? தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள்? அதிமுக, ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் என்ற இரட்டை தலைமையில் முன்னேறுமா? அல்லது, சின்னம்மா என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் உச்சம் தொடுமா? பல கேள்விகள், பல சாத்தியக்கூறுகள்… காலம் பதில் சொல்லும்!!