வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2021 உலகளாவிய பட்டினி குறியீடு (GHI), உலகெங்கிலுமான ஏழை மற்றும் உழைக்கும் மக்களிடையே அதிகரித்து வரும் பட்டினி அளவை எடுத்துக்காட்டியது.
இந்த உலகளாவிய பட்டினி குறியீட்டை தயாரிப்பதற்குப் பொறுப்பான Welthungerhilfe மற்றும் Concern Worldwide அமைப்புகளின் தலைவர்கள் எழுதிய முன்னுரை குறிப்பிடுகையில், “காலநிலை மாற்றம், கோவிட்-19 பெருந்தொற்று, அதிகரித்தளவில் கடுமையான நீடித்த மோதல்கள் என இவற்றினது நச்சார்ந்த கலவையின் விளைவாக ஏற்பட்டுள்ள ஒரு கடுமையான பட்டினி நிலைமையை [அந்த அறிக்கை] சுட்டிக் காட்டுவதாக’ குறிப்பிட்டது.
அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள், கடந்தாண்டில், உலகளாவிய பட்டினியின் அதிகரிப்பில் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது. வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உலக முதலாளித்துவத்தின் விநியோக சங்கிலி வலையமைப்புகளின் சீர்குலைவு ஆகியவை எல்லா அடிப்படை நுகர்வு பொருட்களின் விலைகளையும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க எரிசக்தித்துறை தகவல் ஆணையம், தங்கள் இருப்பிடத்தை வெப்பமூட்ட இயற்கை எரிவாயு பயன்படுத்தும் மொத்த அமெரிக்க குடும்பங்களில் கிட்டத்தட்ட பாதி குடும்பங்கள், வெப்பமூட்டுவதற்காக கடந்தாண்டு குளிர்காலத்தில் செலவிட்டதை விட இந்த குளிர்காலத்தில் சராசரியாக 30 இல் இருந்து 50 சதவீதம் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் நிஜமான வேலை நேர வருவாய்கள் ஜனவரியில் இருந்து 1.9 சதவீதம் சரிந்துள்ளன. உலகெங்கிலுமான நாடுகளின் தொழிலாளர்கள் இதேபோன்ற நிலைமையையே எதிர் கொண்டுள்ளனர், இது வாழ முடியாத நிலைமைக்கு வந்துவிட்டது. அதிகரித்தளவில் வாடகை செலுத்த முடியாமலும், போதுமான உணவு வாங்க முடியாமலும், எரிபொருள் நிரப்ப முடியாமலும், அவர்கள் போராட்டத்திற்குள் இழுக்கப்பட்டு வருகிறார்கள்.
அவர்களைச் சுரண்டும், அதிகமாக அவர்களை வேலை வாங்கும், பின்னர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் அவர்களைக் கைவிடும் ஒரு சமூக அமைப்பான முதலாளித்துவத்தை அவர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள். உலகின் இந்த பொருட்களின் உற்பத்தியாளர்களே கூட உயிர் வாழ வழி இன்றி இருப்பதைக் காண்கிறார்கள். விண்ணை முட்டும் உலக பட்டினி மட்டங்களில் இது அப்பட்டமாக வெளிப்படுகிறது.
இப்போதைய பஞ்சத்தை தவிர்ப்பது மற்றும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஆதரவு நடவடிக்கை என்று ஐக்கிய நாடுகள் சபை ஓர் உயர்மட்ட நிகழ்வை நடத்தி ஒரு வாரத்தில் பட்டினி பற்றிய இந்த GHI அறிக்கை வந்துள்ளது. உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) இயக்குனர்-ஜெனரல் Qu Dongyu அந்த சபையில் கூறுகையில், “இன்று நாம் பல முனைகளிலும் முன்னொருபோதும் இல்லாத உணவு நெருக்கடிகளை முகங்கொடுக்கிறோம். பசி-பட்டினி சம்பந்தமான மரணங்கள் நிகழ்கால யதார்த்தமாகி உள்ளன. … நாம் 2021 இன் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கையில், நிலைமையோ தொடர்ந்து மோசமடைந்து வருகிறது,” என்றார்.
பசி ‘கிட்டத்தட்ட 50 நாடுகளில் தீவிரமான, ஆபத்தான, அல்லது மிகவும் ஆபத்தான மட்டங்களில்’ இருப்பதாக குறிப்பிட்ட அந்த அறிக்கை, ‘பல தசாப்த கால வீழ்ச்சிக்குப் பின்னர், உலகளாவிய ஊட்டச்சத்தின்மை பாதிப்பு … அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டது.
Global Hunger Index தகவல்படி, உலகளவில் பட்டினி மட்டங்களை மூன்று காரணிகள் அதிகரித்து வருகின்றன, அவை 41 மில்லியன் பேரை ‘பஞ்சத்தின் விளிம்புக்கே’ தள்ளி உள்ளன — அவையாவன, “மோதல், காலநிலை மாற்றம், மற்றும் கோவிட்-19 கொண்டு வந்த பொருளாதார சீரழிவு.”
பெருந்தொற்றால் உண்டாக்கப்பட்ட பணவீக்கம் மற்றும் பொருளாதார இடப்பெயர்வால் எரியூட்டப்பட்டு, உலகளவில் உணவு பண்டங்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பிட்ட உணவு பண்டங்களின் சர்வதேச விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் FAO உணவு விலை குறியீடு (FAO Food Price Index – FFPI), ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட செப்டம்பர் மாதம் 32.8 சதவீதம் அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டது. மிகவும் அடிப்படை வியாபார சரக்குகளின் விலைகள் கூட கூர்மையாக அதிகரித்தது; கோதுமை 41 சதவீதமும், மக்காச்சோளம் 38 சதவீதமும் செப்டம்பர் 2020 இல் இருந்து அதிகரித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் மிகப் பெரும் துயரைக் கொண்டுள்ளன. ஜூலையில் Nature Food இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இந்த பெருந்தொற்றுக்கு முன்னரே மூன்று பில்லியன் மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை. உயரும் உணவுப் பொருட்களின் விலைகள், பொதுவான நுகர்வு பண்டங்களின் அதிகரித்து வரும் விலைகள் ஆகியவை நிலைமையை குறிப்பிடத்தக்க வகையில் இன்னும் மோசமாக்கி உள்ளன. உலக மக்கள்தொகையில் 43 சதவீதத்தினர் கோவிட்-19 க்கு முன்னர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாதவர்களாக இருந்தனர், ஆனால் 2020 இறுதியில் இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்திருந்தது.
உணவு விலையில் 32 சதவீத அதிகரிப்பு என்பது ஏழைகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சி குறைந்த நாடுகளில், பெரும்பாலான மக்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 40 முதல் 60 சதவிகிதம் வரை உணவுக்கே செலவிட வேண்டியிருக்கும். அமெரிக்க மக்களில் மிக வறிய 20 சதவீதத்தினர் குடும்ப வருமானத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை உணவுகாக செலவிடுகிறார்கள். விலைவாசி உயர்வு என்பது வாடகை மற்றும் பிற செலவுகளைச் செய்ய இயலாததையோ அல்லது உட்கொள்ளப்படும் உணவின் தரம் மற்றும் ஒட்டுமொத்த ஊட்டச்சத்தைக் குறைப்பதையோ குறிக்கிறது.
உலக தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் எதிர்கொண்டுள்ள பாரிய பட்டினியும் ஊட்டச்சத்தின்மையும் ஒரு சமூக பேரழிவு தானே ஒழிய, இயற்கையான ஒன்றல்ல. இது உலகெங்கிலுமான முதலாளித்துவ வர்க்கத்தால் இழைக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் குற்றமாகும்.
மோதல், இந்த பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இடப்பெயர்வு மற்றும் காலநிலை மாற்றம் என Global Hunger Index அடையாளம் கண்ட உலகப் பட்டினியை அதிகரிக்கும் இந்த மூன்று காரணிகளுமே முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற பேராசை குணாம்சத்தின் ஒருமித்த விளைவுகளாகும்.
கடந்தாண்டில் உலகளாவிய பட்டினி கூர்மையாக அதிகரித்தமை, எல்லாவற்றிற்கும் மேலாக உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் கோவிட்-19 பெருந்தொற்றைக் குற்றகரமாக தவறாக கையாண்டதன் விளைவாகும். உலகளாவிய உணவு நுகர்வு மீது இந்த பெருந்தொற்றின் பொருளாதார தாக்கங்களில் ‘உணவு விலை அதிகரிப்புகள், சந்தை மற்றும் மேய்ச்சல் நடவடிக்கைகளை ஒரே மாதிரியாக கட்டுப்படுத்தும் இயக்க கட்டுப்பாடுகள், அதிகரித்து வரும் பணவீக்கம், நுகர்வு சக்தி குறைவு’ ஆகியவை உள்ளடங்கும் என்று FAO மேற்கோளிட்டது.
‘உணவு பாதுகாப்பின்மை’ பிரிவில் இப்போது 2.37 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை சிறிய உணவுகளோடு, பெரும்பாலும் மிகச் சிறியளவிலான கொழுப்பு மற்றும் ஒரு காய்கறியோடு வெறுமனே ஒரு தானியத்தோடு காலந்தள்ளுகிறார்கள்.
உலகெங்கிலும், உழைக்கும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் தட்டுகளில் உணவு இருப்பதை உறுதி செய்ய பட்டினி கிடக்கிறார்கள். அவர்கள் தங்கள் உணவு உட்கொள்ளும் வேளைகளை நீடிக்க புதிய வழி தேடுகிறார்கள். அவர்கள் மிச்சமீதியைச் சமைக்க வழி காண்கிறார்கள். அவர்கள் உடனடி காப்பி மூலமாக பட்டினியின் வலியைப் போக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரு கரண்டி மீன் குழம்பும், குறைந்தளவில் காய்கறி எண்ணெயையும் சோற்றுடன் கலந்து சாப்பிட்டு முடித்துக் கொள்கிறார்கள்.
உலகின் பெரும்பகுதியில் அடிப்படை அத்தியாவசிய பண்டங்கள் எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக சிறிது சிறிதாக விற்கப்படுகின்றன. அரிசி ஒரு கப் அளவில் வாங்கப்படுகிறது; எண்ணெய் ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் முடித்துக் கொடுக்கப்படுகிறது.
உலகின் மிகப் பணக்கார நாட்டின் தொழிலாள வர்க்கமும் கூட ஊட்டச்சத்தின்மை மற்றும் பட்டினி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அமெரிக்க உள்நகரங்கள் உணவு பாலைவனங்களாக உள்ளன, அங்கே ஆரோக்கியமான உணவு பெறுவதற்கான அருகிலுள்ள இடமே பெரும்பாலும் மைல்களுக்கு அப்பால் இருக்கும், பொது போக்குவரத்தில் சென்று கூட அதை அணுக முடியாது. ஏற்கெனவே பதப்படுத்திய பன்றியும், உளுத்து புழுத்து போன தானியங்களும் தான் அருகிலுள்ள மதுக்கடைகளில் கிடைக்கும். உணவு வினியோக வங்கிகளுக்கு வெளியே பெரும்பாலும் நீண்ட வரிசைகள் இருக்கும். 2020 இல் ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் உணவு வினியோக வங்கியை நம்பி இருந்தார்.
ஐ.நா. சபை உலக உணவுத் திட்டத்தின் (WFP) தகவல்படி, உலக மக்கள் தொகையில் 8.8 சதவீதத்தினர், அதாவது 700 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றோடு தான் படுக்கைக்கு செல்கிறார்கள். பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை என்பது ஆயுட்காலம் குறைவு, மன வளர்ச்சி குறைபாடு, காலத்திற்கு முந்தியே அன்புக்குரியவர்களின் அகால மரணம்; அதாவது விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகளை இழந்த பெற்றோர்களை அர்த்தப்படுத்துகிறது.
இந்த பெருந்தொற்று நெருக்கடியும், தொழிலாளர்களை மீண்டும் தொழிற்சாலைகளுக்குள் தள்ளுவதற்கான முதலாளித்துவ வர்க்கத்தின் முனைவும், உணவு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் விலையுயர்வும் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பார்ந்த வளர்ச்சிக்கு எரியூட்டி வருகின்றன. பல தசாப்தங்களாக தொழிலாளர் போராட்டங்களின் குரல்வளையை நெரித்துள்ள பெருநிறுவன தொழிற்சங்கங்களையும் மீறி, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நகரத் தொடங்கி இருக்கிறார்கள். சமூகத்தின் வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒரு போராட்டத்தில், அவர்களின் உயிர் வாழ்க்கை போராட்டமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நமது கூட்டு உழைப்பின் விளைபொருளான மனிதகுலத்தின் பாரிய செல்வ வளம், இந்த புவியில் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கவும், உடை அளிக்கவும், இருப்பிடம் வழங்கவும், ஒரு வளமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்கவும் போதுமானதாகும்.
ஆனால் இந்த அளப்பரிய ஆதார வளங்கள், ஒரு சில பில்லியனர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களில் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அவர்கள் உலகின் தொழிலாள வர்க்கத்தை ஒட்டுண்ணித்தனமாக சுரண்டி இலாபமீட்டி, அந்த செல்வ வளங்களை வீணடித்து விரயமாக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் இன்னும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள். 2020 இன் போக்கில், உலகின் பில்லியனர்கள் அவர்களின் தனிப்பட்ட செல்வ வளத்தில் கூடுதலாக 1.9 ட்ரில்லியன் டாலர்களை சேர்த்தனர்.
எலொன் முஸ்க், ரிச்சார்ட் பிரான்சன் மற்றும் ஜெஃப் பெஸோஸ் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு பகட்டாரவாரமாக விண்வெளிக்கு விமானம் ஏறினர், அதேவேளையில் உலக மக்கள்தொகையில் பெரும்பாலோர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாமல் இருந்தார்கள். சமூகத்தால் இந்த புவியில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க முடியும், ஆனால் அது பில்லியனர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இணைந்திருங்கள்