கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பைச்  சந்தித்துள்ளது.

இலங்கையில் தற்போது உள்ள நிலவரப்படி வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே எரிபொருளுக்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்று  எரிசக்தித்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான  சிலோன் பெட்ரோலியம் கழகம், அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் பியூப்பிள்ஸ் வங்கி  ஆகிய இரண்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது.

இதனால், எரிபொருள்  கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபணத்தின் தலைவர்  கூறுகையில் இந்திய-இலங்கை பொருளாதார கூட்டாண்மை ஏற்பாட்டின் கீழ் அமெரிக்க டொலர் 500 மில்லியன் நிதி உதவியைப் பெறுவதற்காக நாங்கள் தற்போது இந்திய தூதரகத்தின் மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கான எரிசக்தி துறைச் செயலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவார்கள் என நிதியமைச்சின் செயலாளர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.