விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவேன் எனவும் மூன்று வீடுகளை இணைத்து அமைக்கப்பட்ட வீட்டில் தான் வசிப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் பொய் எனவும், அவற்றை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை எனது நண்பரான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எனது பெயரை கூறி கருத்து வெளியிட்டிருந்தார்.

அதன்போது அவர், நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர்களுடன் விஸ்கி குடித்துக்கொண்டு செயற்பட்டதாக கூறியுள்ளார். அந்தக் கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.

இந்த நாட்டில் என்னைப்பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்த விடயமாக நான் சிகரட் மற்றும் மதுபானத்தை நிராகரிப்பவன் என்பதுடன், போதைப் பொருட்களுக்கு எதிராக அதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் ஆகும். அன்றும், இன்றும், நாளையும் எனது நிலைப்பாடு ஒன்றேயாகும்.

இதேவேளை நான் ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்னர் மூன்று வீடுகளை ஒன்றிணைந்து அதில் வசிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நான் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லமானது தற்போதைய சுகாதார அமைச்சர் இருந்த வீடாகும். நான் அங்கு செல்ல முன்னர் அவரே அங்கு இருந்தார்.

ஜனாதிபதி உரித்து சட்டத்திற்கமைய ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவருக்கு வழங்கப்படக் கூடிய சலுகைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நான் இருக்கும் வீட்டில் இரண்டு வீடுகளை இணைத்து அங்கு, முன்னாள் ஜனாதிபதியான டீ.பி விஜேதுங்க இருந்துள்ளார். இதனை தவறாக புரிந்துகொண்டே தற்போது நான் மூன்று வீடுகளை இணைத்து அமைத்துள்ளதாக கூறியுள்ளனர். அவர் வளர்த்த மரங்களே இப்போது இருக்கின்றது. அது பழைய வீடே. வெளியில் அழகாக தெரிந்தாலும் உள்ளே அப்படி இல்லை.

அமைச்சர் கூறுவதை போன்று நான் மூன்று வீடுகளை இணைத்த வீட்டை அமைத்திருப்பதாக உறுதிப்படுத்தினால் நான் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த விலகுவதற்கு தயாராக இருக்கின்றேன். எந்தவொரு நிறுவனத்திற்கும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தலாம்.

டீ.பி விஜேதுங்க இரண்டு வீடுகளை அமைத்துக் கட்டியுள்ளார். அத்துடன் கெஹலிய ரம்புக்வெல்ல மேலதிகமாக ஒரு பகுதியை இணைத்து இருந்தார். அவர் ஊடக சந்திப்புக்காக அதனை செய்திருந்தார். இதனை நான் செய்யவில்லை என்றார்.

இதேவேளை இது தொடர்பில் சபையில் கருத்து கூறிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இது தொடர்பான தகவல்களை இப்போதே அறிந்துகொண்டேன். நான் இந்த விடயம் தொடர்பில் விரிவான உரையொன்றை பின்னர் செய்கின்றேன் என்றார்.