அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது.இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன.இந்த இரண்டு அழைப்புகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம்.

ஒரு பிராந்திய பேரரசும் உலக பேரரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் அழைக்கின்றன என்று சொன்னால் இரண்டு பேரரசுகளுக்கும் தமிழ் மக்களை ஏதோ ஒரு விதத்தில் எதற்காகவோ கையாள வேண்டிய ஒரு தேவை வந்து விட்டது என்று பொருள்.அதேசமயம் இந்தியாவின் அழைப்பு எப்பொழுது வந்திருக்கிறது என்ற காலகட்டத்தையும் இங்கு பார்க்க வேண்டும்.

அமெரிக்காவுக்குப் போன சுமந்திரன் திரும்பி வந்த கையோடு இந்த அழைப்பு வந்திருக்கிறது.அதோடு டெலோ இயக்கம் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் தேங்கிப் போயிருந்த ஒரு காலகட்டத்தில் இந்த அழைப்பு வந்திருக்கிறது..மூன்றாவதாக பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்று திரும்பியிருக்கும் ஒரு காலகட்டம் இது.

பசில் ராஜபக்சவின் இந்திய விஜயம் உதவி பெறும் நோக்கிலானது என்று வெளியில் காட்டப்பட்டது. அவருக்கு அங்கே உதவிகள் கிடைத்திருக்கின்றன. தவிர உலக வங்கி அனைத்துலக நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவி பெறுமாறு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. இவைதவிர இலங்கை அரசாங்கம் இந்தியாவோடு ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைகள் சிலவற்றை இதுவரையிலும் நிறைவேற்றவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக பசில் ராஜபக்சவை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஒரு சிறிய நாட்டின் அமைச்சரை ஒரு பேரரசின் பிரதமர் கட்டாயம் சந்திப்பார் என்றில்லை. ஆனால் பசில் ராஜபக்ச யார் என்றால் சாதாரண அமைச்சர் மட்டுமல்ல. கோத்தாபய அரசாங்கத்தின் மாற்றத்தின் முகம் அவர். அவர் பிரதமர் மோடியை சந்திக்க கேட்டு அது நிராகரிக்கப்பட்டதா?அல்லது அவ்வாறு சந்திக்கும் நிகழ்ச்சி நிரல் எதுவும் அவருடைய விஜயத்தில் உள்ளடக்கப்படவில்லையா? என்பதையும் பார்க்கவேண்டும்.

ஆனால் இங்கு முக்கியம் என்னவென்றால் பசிலை சந்திக்காத பிரதமர் மோடி கூட்டமைப்பை சந்திக்க கேட்டிருக்கிறார் என்பதுதான்.கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக இவ்வாறான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டது. இந்த வாரம்தான் புதுடில்லி அதற்குரிய அழைப்பை விடுத்திருக்கிறது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதைப் போல இந்தியாவின் அழைப்பும் அமெரிக்காவின் அழைப்பும் ஒன்றல்ல. ஏனெனில் அமெரிக்காவின் அழைப்பு முழுத்தமிழ் பிரதிநிதித்துவத்தையும் வருமாறு கேட்டதாக தெரியவில்லை. அப்படி கேட்டிருந்தால் தமிழ்தேசிய பரப்பில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுதான் போயிருக்கும். அதேசமயம் அது கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தூதுக்குழு அல்ல. ஏனென்றால் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அதில் இணைக்கப்படவில்லை. அதுபோலவே அது தமிழரசுக்கட்சியின் குழுவும் அல்ல. என்றால் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு அந்த பயணம் பற்றி அதிகம் தெரியாது. எனவே அமெரிக்கா எப்படிப்பட்ட ஒரு குழு தன்னிடம் வர வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கவில்லை.

ஆனால் புதுடில்லியின் அழைப்பு அத்தகையது அல்ல. அது தெளிவாக கூட்டமைப்புத் தலைவர்கள் என்று கேட்டிருக்கிறது.எனவே பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவை டெல்லிக்கு அனுப்பவேண்டும் என்ற தெளிவான ஓர் அழைப்பு அது

இந்த அழைப்புக்கூட தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகளையும் நோக்கி வைக்கப்பட்ட அழைப்பாக தெரியவில்லை. கூட்டமைப்பை நோக்கித்தான் அழைப்பு வந்திருக்கிறது.எனவே கூட்டமைப்போடு இந்தியா எதையோ உரையாட விரும்புகிறது என்று பொருள்.

ஏற்கனவே டெலோ தொடங்கிய முன்முயற்சிகள் தேங்கி நிற்பதற்கு காரணம் சம்பந்தரும் சுமந்திரனும்தான். அந்த முயற்சிகளில் இணைவதற்கு இருவரும் தயாரில்லை. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் தயாரில்லை. 13ஆவது திருத்தத்தை இந்தியாவிடம் கேட்க வேண்டாம் என்பது அவர்களுடைய நிலைப்பாடு போலத் தெரிகிறது.13 ஐத்தாண்டிய ஒரு தீர்வை அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.அதனால்தான் டெலோவின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் இணைய முடியாது என்ற ஒரு கருத்து தமிழரசுக் கட்சிக்குள் நிலவுகிறது. ஆனால் அது மட்டும் ஒரு காரணம் அல்ல. சிறிய பங்காளிக் கட்சியின் பின்செல்ல தமிழரசுக் கட்சி தயார் இல்லை என்பதும் ஒரு காரணம்தான். அதோடு மேற்கு நாடுகளை நோக்கி சென்றால் தீர்வின் பருமன் அதிகரிக்கும் என்று தமிழரசுக்கட்சி நம்புகிறதோ தெரியவில்லை. இவை தவிர மற்றொரு காரணமும் உண்டு. இந்தியாவை நோக்கிச் சென்றால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகள் கோவப்படுவார்கள் ,பயப்படுவார்கள் என்று சம்பந்தர் கருதுகிறாரோ தெரியவில்லை.அதாவது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை கோபப்படுத்தாமல், பயமுறுத்தாமல் ஒரு தீர்வைப் பெற வேண்டும் என்று அவர் நம்புகிறார் போலும்.இது காரணமாகவே டெலோ இயக்கம் தமது முயற்சிகளுக்கு தலைமை தாங்குமாறு சம்பந்தரைக் கேட்டபோது சம்பந்தர் தொடர்ச்சியாக அந்த அழைப்பை உதாசீனம் செய்தார்.

ஆனால் இதில் 13வது திருத்தம்தான் பிரச்சினை என்றால் அல்லது டெலோ இயக்கம் அதைச் செய்வதுதான் பிரச்சினை என்றால் டெலோ விடுத்த அழைப்பை ஏற்று அந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வேறுவிதமான ஒரு அழைப்பை இந்தியாவை நோக்கி முன்வைத்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தெரிவைக் குறித்து ஏன் சம்பந்தரும் சுமந்திரனும் சிந்திக்கவில்லை? அவர்கள் இந்தியாவை ஒரு அழுத்தப்பிரயோக சக்தியாக உள்ளே கொண்டுவர விரும்பவில்லையா? எனினும்,பிந்திக் கிடைத்த செய்திகளின்படி சம்பந்தர் டெலோவின் அழைப்பை ஏற்றிருப்பதாகத் தெரிகிறது

அவ்வாறு அந்த முன்முயற்சிகளை உதாசீனம் செய்வது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக இந்தியாவுடனான உறவுகளை பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. என்பதனால்தான் சுமந்திரன் தனது அமெரிக்க விஜயத்தின் பொழுது இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதிகம் பேசினார்.இப்படிப்பட்டதொரு பின்னணியில்தான் கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறது.ஆனால் தமிழரசுக்கட்சி ஆச்சந்திப்பை ஒத்திவைத்திருக்கிறது. அதற்குக் காரணம் தமிழரசுக் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட ஒரு வைபவம் என்று கூறப்படுகிறது. அதோடு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதம் நடைபெறும் ஒரு காலகட்டத்தில் அதில் பங்குபற்றி வாக்களிக்கவேண்டும் என்பதனாலும் சம்பந்தர் டெல்லிச் சந்திப்பை ஒத்தி வைக்கக் கேட்டதாக கூறப்படுகிறது.

இத்தகவல் சரியாக இருந்தால் மாவை சேனாதிராஜா இல்லாமல் ஒரு தூதுக்குழு போகக்கூடாது என்று சம்பந்தரும் சுமந்திரனும் சிந்திக்கிறார்களா? அந்தளவுக்கு மாவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா ? இல்லையே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகளை தொகுத்துப் பார்த்தால் மாவை சேனாதிராஜாவை சம்பந்தரும் சுமந்திரனும் அந்தளவுக்கு மதிப்பதாக தெரியவில்லை. அவரை ஒரு பொம்மைபோல முன் நிறுத்தி பல விடயங்களை சுமந்திரனும் சம்பந்தனும்தான் செய்து வருகிறார்கள். மூத்த கட்சியும் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியுமான தமிழரசுக் கட்சியின் இப்போதிருக்கும் சீரழிவுகளுக்கு தலைவராக மாவைதான் முதல் பொறுப்பு. அதற்கடுத்தபடியாக சுமந்திரனும் சம்பந்தரும் பொறுப்பு. இவை தவிர கட்சி இவ்வாறு சீரழிவதை சகித்துக் கொண்டிருக்கும் எல்லாக் கட்சி உறுப்பினர்களும் பொறுப்பு.எனவே மாவை அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்பதற்காக அந்த பயணத்தை ஒத்தி வைப்பது என்பது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சாட்டாகத் தெரியவில்லையா? அவர் அப்படிப் போனாலும்கூட அப்படிப்பட்ட சந்திப்புகளில் திருப்திகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில் உரையாடக்கூடிய ஒருவரா என்ற கேள்விக்கும் பதில் வேண்டும்.

மேலும் பட்ஜெட் விவாதத்தை முன்வைத்தே புதுடில்லி சந்திப்புக்கான நாட்களை ஒழுங்குபடுத்தியதாகவும் தகவல் உண்டு. முன்பு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின்படி 7ஆம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சரையும், 8ஆம் திகதி பிரதமரையும் சந்தித்த பின் உடனடியாக கூட்டமைப்பு நாடு திரும்பி பட்ஜெட் வாக்களிப்பில் பங்கெடுக்க கூடிய விதத்தில்தான் சந்திப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டதாக தகவல் உண்டு. மேலும், நிதியமைச்சரான பசில் ராஜபக்சவே பட்ஜெட் விவாத இடைவெளிக்குள்தான் இந்தியா போய் வந்திருக்கிறார். எனவே,சம்பந்தரும் சுமந்திரனும் இந்தியாவின் அழைப்பை ஒத்தி வைப்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்ததிருக்கிறார்களா ?என்ற கேள்விக்கும் விடை அவசியம். நிச்சயமாக அக்காரணம் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்லை தமிழரசுக்கட்சி முதியஸ்தர்களுக்கும் தெரியாது.இவ்வாறு தனது அழைப்பு நிராகரிக்கப்பட்டதால் இந்தியா மீண்டும் அவர்களை அழைக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சம்பந்தர் இவ்வாறு இந்தியாவின் அழைப்பைக் கையாண்டமை குறித்து ஒரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கிண்டலாக,பின்வரும் தொனிப்படச் சொன்னாராம் ” இப்படி ஒரு துணிவான தலைவரின் கீழ் செயற்படுவதற்கு நாங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் 150 கோடி மக்களுடைய தலைவரின் அழைப்பை 137 வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற ஒரு தலைவர் ஒத்திவைக்கக் கேட்பது என்பது எவ்வளவு துணிச்சலான விடயம்?”