சீன ரினமன் சதுக்கத்தில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட ஊடக பிரதானி ஜிம்மி லாய் என்பவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சுமார் 50 மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக கூடியதற்காக இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஜிம்மி லாய் உட்பட 8 பிரபலமானவர்களுக்கு இன்று(13) தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களுக்கும் சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ரினமன் சதுக்கத்தில் சீன இராணுவத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அந்த சம்பவத்துக்கு சர்வதேச ரீதியாக கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பல ஆயிரக்கணக்கான மக்கள் தடையையும் மீறி ஆர்ப்பாட்டங்களிலும், நினைவேந்தலிலும் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் தற்போது ஹொங்கொங்கில் பாரிய அளவில் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றினை காரணம் காட்டி, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஹொங்கொங் நிர்வாகத்தினால் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டது.

சீனாவின் அழுத்தம் காரணமாகவே, ஹொங்கொங் நிர்வாகம் தடை நடவடிக்கைகளை விதித்துள்ளதாக ஜனநாயகம் சார்பான ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ShareTweetShare