வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நிமயனம் வழங்கும் வேலைத்திட்டம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ்விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அதற்கமைய பயிற்சி பெற்று இதுவரையில் வேலை வாய்ப்பின்றியிருக்கின்ற 51,000 பட்டதாரிகளுக்கு, அரசாங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஜனவரி 3 ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளது. அவர்களில் ஒரு வருடம் பயிற்சியை நிறைவு செய்துள்ள 42,500 பேரின் நியமனம் அத்தினத்திலேயே நிரந்தரமாக்கப்படும்.
இவ்வாண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிற்சியில் இணைக்கப்பட்டவர்களுக்கு, ஒருவருடம் பயிற்சி நிறைவடைந்த பின்னர் 2022 ஏப்ரல் முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
இளம் தலைமுறையினரை இவ்வாறு சேவையில் இணைத்து கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த பெப்ரவரியில் அமைச்சரவையில் முன்வைத்தார்.
இலங்கையில் மாத்திரமின்றி கொவிட் பரவலின் காரணமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள 51,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
‘வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குதல்’ , ‘2020 இல் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குதல்’ ஆகிய வேலைத்திட்டங்களில் 58,116 பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் 51,000 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
குறித்த பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏதேனுமொரு பட்டப்படிப்பினை அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட டிப்ளோமாவினை 2020 செப்டெம்பர் 31 ஆம் திகதி நிறைவு செய்திருக்க வேண்டும். இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் அரசாங்கத்தின் வெவ்வேறு திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில், உள்ளுராட்சி நிறுவனங்களில் பயிற்சிக்காக இணைத்து கொள்ளப்பட்டனர்.
அத்தோடு 22,000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதோடு, பயிற்சியை நிறைவு செய்துள்ள 51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர அரச நியமனம் வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர் சேவையில் இணைய விரும்புவதற்கு கோரிக்கை விடுத்த (கல்வித்துறையில் பயிற்சி பெற்ற அல்லது பெறாதவர்கள்) நபர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்குரிய நியமன கடிதங்கள் பொது நிர்வாக அமைச்சினால் உரிய உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்காக மத்திய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
இணைந்திருங்கள்