சர்வதேச நாணய நிதியத்தின் மீது இலங்கை அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சுகிறது என்று தெரியவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கும் பலவீனமான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு திவாலாகும் பட்சத்தில், நாட்டில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டினர் தங்கள் முதலீடுகளை எடுத்துக்கொண்டு வேறு நாடுகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது, அது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பேரிடியாக அமையும் எனவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

“இந்த ஆண்டு செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 7,000 மில்லியன் டொலர்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் 699 மில்லியன் டொலலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இந்த கடனை செலுத்துவதை தள்ளிப்போட முடியாது.

அதனால்தான் பலர் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல பரிந்துரைக்கின்றனர்.

எனினும், அரசாங்கம் இன்னும் சீனாவிடம் கடன் வாங்குகிறது. இவ்வாறான கடன்கள் வழங்கப்படும் போது, ​​தங்கள் நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும் அல்லது இலங்கையில் உள்ள சொத்து ஒன்றை தமது நாட்டின் பயன்பாட்டிற்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கொள்ளையாக கொண்டுள்ளது.

இப்போது இந்த நாடு ஏலக்கூடம் போல் உள்ளது. தற்போதைய நிலையில், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது பிற சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சலுகை அடிப்படையில் கடன்களைப் பெற வேண்டும்.

எனினும், அந்த நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் மீது இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சுகிறது என்று தெரியவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் வாங்கும் போது, ​​கடன் வாங்கும் நாடு அவர்களின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை, ஏனைய நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்த பயன்படுத்த முடியாது.

பணத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த வேண்டும். அந்த பணத்தை தவறாக பயன்படுத்த முடியாது. கடன் வழங்கப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியம், நிதி தொடர்பில் மேற்பார்வை செய்யும்.

எவ்வாறாயினும், இந்த அரசாங்கம் தனது குறுகிய கால ஆதாயத்திற்காக முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிப்பதையே இன்று நாம் காண்கின்றோம்.” என அவர் கூறியுள்ளார்.