இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதனையடுத்து இந்த விடயத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் காதுகளுக்குக் கொண்டு சென்றுள்ளார். தான் ஜனாதிபதியுடன் பேசிவிட்டு, இதனை சுமூகமாக தீர்ப்பதாகவும், அதுவரை இராஜினாமா கடிதத்தைக் கொடுக்க வேண்டாம் என்றும் நிதியமைச்சர், அருந்திக்க பெர்னாண்டோ அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக அருந்திக்க பெர்னாண்டோ அமைச்சர் நேற்று மாலை அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு என்ன நடந்தது என்ற விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

வெளிநாட்டில் இருந்து வந்த பிரபல வர்த்தகர் ஒருவரை, கட்டுநாயக்கவின் பிரமுகம் வழித்தடத்தில் அழைத்துவந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கிடைத்திருந்த நிலையில், ராமக மருத்துவபீட மாணவர் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மாணவர்களைத் தாக்கிய சம்பவத்துடன் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் பிரத்தியோக ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ள விவகாரம் தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகம மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் :

களனி பல்கலைக்கழகத்தின் ராகமை மருத்துவிட பீடத்திற்கு அதிகாலை 3 மணியளவில் வந்த சிலர், அங்கிருந்த மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

15 பேர் வரை குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் வந்த காட்சிகளை மாணவர்கள் சிலர் கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்திருந்தனர்.

முகங்களை மூடிக் கொண்டு, கைகளில் பொல்லுகளுடன் குறித்த தரப்பினர் மாணவர் வளாகத்திற்குள் உள்நுழைந்துள்ளனர்.

இதன்போது மாணவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் வந்த வாகனம் ஒன்றையும் கைப்பற்றியதுடன், அதில் இருந்த சாரதியையும் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து அதிசொகுசு வாகனங்களில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்பின்னர் ராகம பொலிசார் சம்பவத்திற்கு வந்ததை அடுத்து மாணவர்கள் பிடித்த சாரதியை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிக்கப்பட்ட சாரதி, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் பிரத்தியேக பணியாளர் பிரிவின் சாரதி என்று தெரியவந்துள்ளது.

இதற்கான அடையாள அட்டையையும் மாணவர்கள் மீட்டெடுத்துள்ளனர். இந்த அடையாள அட்டை 2018ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Arundika 2022.01 1

மாணவர்கள் கைப்பற்றிய வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என்றும், இந்த ஆண்டுக்கான அனுமதிப் பத்திரம் கூட அந்த வாகனத்திற்குப் பெறப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான மூன்று மாணவர்கள் ராமக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கிடையில் மருத்துவப்பீடத்திற்கு உள்ளே நடந்த பிரச்சினையை மையப்படுத்தி, வெளிதரப்பினர் உள்நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்த போது இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மருத்துவபீடத்தின் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதேவேளை, தன்னுடன் தொடர்பு பட்ட ஒருவர் அல்லது தனது ஊழியர் ஒருவர் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால் அதுகுறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு ஊழியர் ஒருவர் இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு எதிராக தொழில்ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சாரதி தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வாகனத்தை எவ்வித அனுமதியும் இன்றி எடுத்துச் சென்றுள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த சாரதி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துபீடத்தில் மாணவர்களின் தாக்கப்பட்ட ஒரு மாணவன் உதவி கோரிய நிலையில், குறித்த சாரதி தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு பேரை ராகம பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். தாக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் இரண்டாம் ஆண்டு மாணவன், பிடிபட்ட சாரதி உள்ளிட்ட ஆறுபேரே இவ்வாறு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.