மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள, பௌத்த வாக்குகளை அறுவடைசெய்து கொடுத்த அணிகளுள் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பிரதான பங்குண்டு. மஹிந்த தரப்பு இன்று கோலோச்சுவதற்கும் அன்று அமைக்கப்பட்ட அடித்தளமே பிரதான காரணமாகும்.
எனினும், 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது ஜாதிக ஹெல உறுமய பல அணிகளாக பிளவுபட்டன.
அரசிலிருந்து வெளியேறி சம்பிக்க ரணவக்க மைத்திரிக்கு ஆதரவு வழங்கினார். அவருடன் வெளியேவந்த உதய கம்மன்பில மீண்டும் மஹிந்த பக்கம் தாவினார். அதற்கு முன்னதாகவே அத்துரலிய ரத்தன தேரரும் தனிவழி சென்றுவிட்டார்.
கட்சியை கலைத்துவிட்டு ஐக்கிய தேசியக்கட்சியுடன் சம்பிக்க ரணவக்க சங்கமித்தார். எனினும், அவருக்கு உரிய இடம் இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தார்.
அவரின் அணியிலேயே பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். அந்த அணியில் சம்பிக்க தற்போது நீடித்தாலும், ‘43’ எனும் அரசியல் இயக்கத்தை கட்யெழுப்பியுள்ளார். அதற்கு பல தரப்புகளும் ஆதரவை வழங்கிவருகின்றன.
இந்நிலையில் அண்மையில் மாநாட்டைக்கூட சம்பிக்க ரணவக்க வெற்றிகரமாக நடத்தி முடித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
நிகழ்வு ஏற்பாடுகள் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது. மொழிகளுக்கு உரிய இடம், கொள்கை அடிப்படையிலான திட்டம் என என ஒவ்வொரு அம்சமும் கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன . இராஜதந்திர மட்டத்திலும் சம்பிக்கவின் நகர்வுக்கு ஆதரவு கிட்டிவருகின்றதாம்.
பலமுனை தாக்குதல்கள்மூலமே ராஜபக்ச அரசை வீழ்த்தலாம். அந்த முனைகளில் சம்பிக்கவின் படையணியும் ஒன்றெனக்கூறப்பட்டாலும், சம்பிக்கவின் இந்த அணுகுமுறை சஜித்துக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட விடயங்களே இதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இணைந்திருங்கள்