“போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் மூண்டது. அது தொடர்பிலேயே அனைவரினதும் கவனம் திரும்பியது. ஐ.நா. மற்றும் அதன் கிளை அமைப்புகளின் பார்வையும் திரும்பின. அவ்வாறு கவனம் செலுத்தப்பட வேண்டியது மேற்படி அமைப்புகளின் கடப்பாடும்கூட.

எனவே, இப்படியான நிலையில் இலங்கைத் தமிழர் விவகாரம், மனித உரிமைகள் பேரவையில் கவனிப்பாரற்று போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அந்த அச்சத்தை போக்கும் விதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் மிகவும் கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை குறித்து மார்ச் 03 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது உறுப்பு நாடுகளின் நிலைப்பாடுகளையும் அறியலாம்.

அதேவேளை, நாம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள். போரின் வலி நன்கு புரியும். எனவே, போரை நிறுத்துமாறு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார் எம்.ஏ. சுமந்திரன்.