குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூட இப்போதும் உயிருடன் இருப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சாத்தியமான செயற்பாடுகளால்தான் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்து செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தை விமர்சிப்போர் கூட அதனால்தான் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்து ஜனாதிபதி ஆசனத்திலிருந்து கொண்டு அரசியல் செய்யவில்லை. மாறாக கொரோனா ஆட்கொல்லி தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமையளித்து செயற்பட்டுள்ளார். அவர் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதால் சில அரசியல் கட்சியினர் அரசியல் இலாபம் பெறுவதற்காக குறுகிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான ஆட்கொல்லி தொற்றுநோயை முழு உலகமும் எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்து 02 வருடங்கள் சென்றுள்ள போதும் அவர் என்ன செய்துள்ளாரெனக் கேள்வி எழுப்புவோருக்கு நாம் சொல்லக் கூடிய பதில் நாம் அனைவருமே இன்று உயிருடனிருப்பது அவர் மேற்கொண்ட செயற்பாடுகளால்தான் என்பதே. நாம் அனைவரும் இணைந்து நாட்டை கொரோனாவிலிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.