கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் உலகிற்கு உண்மையான அச்சுறுத்தலாக அமெரிக்காவே இருக்கிறது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நடந்த ஆயுதந் தாங்கிய போர்களில் 80 விழுக்காடு போர்கள் அமெரிக்காவால் தான் நடத்தப்பட்டன என்று புள்ளி விபரங்களோடு சீன வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவில் உள்ள சீனத்தூதரகமும் இதைத் தெரிவித்திருக்கிறது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதிலிருந்து இந்த நூற்றாண்டின் துவக்கம் வரையில் நடந்த பல்வேறு போர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டை சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் வைத்துள்ளார்கள்.
உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ள வேளையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சீன ராணுவம், தன் விரல்களை அமெரிக்காவை நோக்கி நீட்டியுள்ளது. 1945 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையில் ஏராளமான போர்கள் நடந்துள்ளன. உலகம் முழு வதும் 153 பகுதிகளில் இந்தப் போர்கள் நடத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் நடந்த போர்களின் எண்ணிக்கை 248 ஆகும். அவற்றில் அமெரிக்காவால் துவக்கப்பட்ட போர்களின் எண்ணிக்கை 201 ஆக உள்ளது என்று சுட்டிக்காட்டும் சீனத் தூதரகம், இந்த உலகின் உண்மையான அச்சுறுத்தலே அமெரிக்காதான் என்பதை மறந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறது. எரியும் நெருப்பை அணைக்க மற்றவர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்லும் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம்தான் தற்போது உக்ரைனில் நிலவும் போருக்குக் காரணமாகும் என்று குற்றம் சாட்டும் சீனத் தூதரகம்,
“ஜோ பைடன் நிர்வாகம்தான் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது” என்று குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் போர்களைத் துவக்கியது அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டை ரஷ்யாவும் முன்வைத்துள்ளது. இது குறித்து “அண்டை நாடுகளுடன் மேற்கொண்ட போர்களின் எண்ணிக்கையில் நிச்சயமாக அமெரிக்காவுடன் எங்களால் போட்டியிட முடியாது” என்று நையாண்டியாக ரஷ்யாவின் ஐ.நா.சபைப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அமெரிக்கா பாடம் எடுக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
போரை நாங்கள் துவக்கவில்லை : ரஷ்யா
தற்போது நடைபெற்று வரும் போரை ரஷ்யா துவக்கவில்லை என்றும், மாறாக, போரை முடிவுக்குக் கொண்டு வரவே முயற் சிக்கிறது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் நிலவி வந்த மோசமான நிலைமை பற்றி ஏற்கனவே நாங்கள் தெரிவித்து வந்தோம் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா குறிப்பிட்டார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், “பதற்றத்தைத் தணிக்க எந்த வித முயற்சி எடுக்கப்பட்டாலும் அதை மேற்கத்திய நாடுகள் நிராகரித்தன. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை நிறுத்தினார்கள். தற்போதைய போருக்கு அதுவே காரணம்” என்றார். ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருகிறது. இந்தப் போரை ரஷ்யா உருவாக்க வில்லை என்று கூறிய அவர், “பல ஆண்டு களாக குண்டுகளுக்கு மத்தியில் டான்பாஸ் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்தக் கால கட்டத்தில் இது போன்ற அட்டூழியங்களுக்கு எதிராக எழுமாறு சர்வதேச சமூகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதுவரையில் அந்தப்பகுதியில் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் நாடுகள், இந்தப்பகுதி மீது நடத்தப்பட்ட கொடுமைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்றார். 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டவிரோதக் கலகம் பற்றி பல நாடுகள் மவுனம் சாதித்தன. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகவே பங்கேற்றன. சொந்த மக்களை அழிக்கும் ஆட்சியாளர்களை இவர்கள் ஆதரித்தார்கள் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் ராணுவம் வீசும் குண்டுகளிலிருந்து காப்பாற்றுங்கள் என்று டான்பாஸ் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதால்தான் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் குறிப்பிட்டதை செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
இணைந்திருங்கள்