” ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்கள் ஊடாக நாட்டில் அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.” – என்றுமுன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக மாறிவிடும் என நான் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தேன். டொலர்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் எனவும் கூறிவந்தேன்.

அதனை கவனத்தில் கொள்ளாது கணக்கின்றி செலவு செய்து, நாடு அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது. இன்னும் சில வாரங்கள் அல்லது ஒரு மாத்திற்குள் நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என்பதை விருப்பமின்றியேனும் அறிவிக்க நேரிடும்.

நாளை யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமையை மாற்ற முடியாது. உலகில் அரசியல்வாதிகளை கொள்ளையிடுமாறு அழுத்தம் கொடுக்கும் அரசியலமைப்புச் சட்டம் இருக்கும் ஒரே நாடு இலங்கை என நான் நினைக்கின்றேன்.

அரசியலமைப்புச் சட்டத்திலேயே சிக்கல் இருக்கின்றது. வேறு தரப்பினர் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினை தீராது. தற்போது நாடாளுமன்றத்தில் இருப்போரை பயன்படுத்தி இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது அத்தியவசியமான விடயமாக இருந்தாலும் அவர்களை அனுப்பும் முன்னர் இவர்களை பயன்படுத்தி அரசியலமைப்பை திருத்த வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது.” – என்றார் .