கேள்வி: பிரதம மந்திரி அவர்களே, மக்களின் சில பகுதியினர் உங்களை பதவி விலகிவிட்டு வீட்டுக்குப் போகும்படி கூறுகின்ற ஒரு சூழலில் நான் உங்களைச் சந்திக்கிறேன். ஒரு வருடத்துக்கு முன்னர் எவரும் இதை நினைத்தும் பார்த்திருக்கமாட்டார்கள். நீங்கள் இதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: இதைக் காண்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் மக்கள் எனக்கெதிராகவும் ஆதரவாகவும் கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் தெரிவிக்க முடியும். திரும்பிப் பார்க்கையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படியும், அபிவிருத்தியை மேற்கொள்ளும்படியும், முதலீடுகளைக் கொண்டு வந்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்படியும் பல விடயங்களை மக்கள் என்னிடம் கோரினார்கள். ஆனால் இன்று மக்களின் சில பகுதியினர் இனியும் என்னைத் தேவையில்லை என்கின்றனர். எனவே, அது சரிதான். இந்த நாட்டு மக்களுக்கு செய்யப்பட்டதை மறந்து விடுவது மனித இயல்பு. நாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து அவர்களிடம் கையளித்ததால் அவர்கள் இன்று தமது கருத்துகளைச் சுதந்திரமாக தெரிவிக்க முடிகிறது.

கேள்வி: 2020 தேர்தலின் போது நீங்கள் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றீர்கள். ஆனால் இன்று மக்கள் உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக வீதிகளில் இறங்கியுள்ளார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: மக்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரே இவ்வாறு கூறுகின்றனர். எப்பொழுதும் எங்களுக்கு எதிராக இருந்த சில குழுக்கள் இந்தப் பிரிவினரிடையே இருக்கின்றனர். எங்களைப் போகும்படி சொல்வதற்கு இவர்கள் யார்? இது நடைமுறைரீதியிலானது அல்ல. நாங்கள் ஒரு ஆணையின் ஊடாக வந்துள்ளோம். எனவே, சிலர் கூறுவதற்காக நாம் போய்விட முடியாது. மக்கள் எம்மை மாற்ற விரும்பினால் அதை தேர்தல் மூலம் செய்யலாம்.

கேள்வி: ஆனால் உங்களது வாக்கு வங்கி தொடர்ந்தும் அப்படியே இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக. இதே மக்கள் அடுத்த தேர்தல்களிலும் எனக்கே வாக்களிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு நான் யார் என்பதும், எப்படியானவன் என்பதும் தெரியும். எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது. பாருங்கள், அந்த மக்கள் எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சில பகுதியினர் என்னைப் போகும்படி கூறுவதன் அர்த்தம் எமக்கு வாக்களித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூறுவதாக ஆகிவிடாது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முழு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல. இருப்பினும் அவர்களது கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்.

கேள்வி: பிரதம மந்திரி அவர்களே, தற்போதைய பிரச்சினைகளால் ராஜபக்ச என்ற பெயர் கடுமையாக சிதைவடைந்துள்ளது. மக்கள் ‘ராஜபக்ச வீட்டுக்கு போ’ என்ற இயக்கத்தை பெரும் எடுப்பில் மேற்கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீரகள்?

பதில்: இது எங்களுக்கு புதியது அல்ல. இது பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆனால் தொடர்ந்தும் இருக்கின்றோம். மக்கள் தெரிவு என்றபடியால் நாம் ஒரு ஆணையைப் பெற்று வந்திருக்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள். நாம் மக்களுடன் இருக்கும் வரை முறைப்படி எல்லாவற்றையும் செய்வோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. மக்கள் விரும்புவதால் நாங்கள் இங்கே இருக்கின்றோம். ஒரு நாளைக்கு மக்கள் எங்களைப் போகச் சொன்னால் நாம் போய்விடுவோம். 2015 இல் நாம் தேர்தலில் தோல்வியுற்றோம். ஆனால் 2019இல் நாம் திரும்பி வந்தோம். எனவே பெரும்பான்மை எங்களுடன் உள்ளது.

கேள்வி: உங்களுக்கும், உங்கள் சகோதரர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றது. இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் நிகழும் உள் சண்டையால் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இவையெல்லாம் பொய்யானவை. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி. ஜனாதிபதி என்ற வகையில் நான் எப்பொழுதும் அவரை மதிப்பவன். அவர் எனது இளைய சகோதரர் என்பது வேறு விடயம். அது தனிப்பட்ட வகையான உறவு. ஆனால் அவர் ஜனாதிபதி என்ற வகையில் நான் அவர்மீது மதிப்பு வைத்துள்ளேன். அதேநேரத்தில் அமைச்சரவை உட்பட பல விடயங்களில் நாம் விவாதிப்பதுண்டு. ஆனால் எமது விவாதங்கள் ஒரு கட்டத்தில் நின்றுவிடும். அவர் ஜனாதிபதியாகவும் நான் பிரதம மந்திரியாகவும் இருப்பதால் நாம் ஒரே பக்கத்தில் (ளுயஅந Pயபந) இருக்கிறோம். எமக்கிடையே வாக்குவாங்கள் இருக்குமானால் நாங்கள் தொடர்ந்து ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் செயற்பட முடியாது. அது நாட்டுக்கு நல்லதல்ல. ஆகையால் உங்களது கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்து தற்போதைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதுடன், முன்னோக்கிச் செல்வது எப்படி என்பதிலும் உடன்பாட்டுக்கு வர முடிகிறது.

கேள்வி: பிரதம மந்திரி அவர்களே, 2019 இல் நீங்கள் உங்கள் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை அன்பளிப்பாக வழங்கினீர்கள். அவருக்கு வாக்களிக்கும்படி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினீர்கள். இன்று, நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதைப் பாருங்கள். இது பற்றி உங்களுக்கு ஏதாவது வருத்தம் உள்ளதா?

பதில்: அப்படி எல்லாம் இல்லை. கோத்தபாய ராஜபக்ச தனது கடமையை நன்றாகவும் சிறப்பாகவும் செய்கிறார் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்பதை நாம் உணர்கின்ற போதிலும், கடுமையாக உழைத்து இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்போம். மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும், பொருளாதாரத்தை சரியான நிலைக்கு கொண்டு வருவதிலும் நாம் அக்கறை செலுத்தி வருகின்றோம். கோத்தபாய ஜனாதிபதி பதவியை பொறுப்பெடுத்த நேரத்தில் கொவிட் – 19 பெருந்தொற்று ஏற்பட்டு அதனால் பெரும் தாக்கம் ஏற்பட்டதை நீங்கள் கட்டாயம் உணர வேண்டும். எமது அந்நியச் செலாவணி வருகை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பல நாடுகள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கையில் நாம் எமது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கினோம். இப்படியிருக்க ஜனாதிபதி தோல்வியடைந்துவிட்டார் என எவரும் கூற முடியாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வழிவகை குறித்து நாம் ஆராய்ந்து வருவதுடன், விரைவில் அவற்றுக்குத் தீர்வு கண்டு, மக்கள் நிவாரணம் பெற வழிவகுப்போம் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.

கேள்வி: அப்படியானால், இந்தப் பிரச்சினைகளை உங்களாலும் ஜனாதிபதியாலும் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில்: நிச்சயமாக, நாம் ஏற்கெனவே இது சம்பந்தமாக செயல்பட்டு வருகிறோம். அமைச்சரவையுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நிச்சயமாக விரைவில் தீர்வு காண்போம்.

கேள்வி: நீங்கள் சொல்கிறீர்கள் இந்த விடயம் குறித்து செயல்பட்டு வருவதாக. ஆனால் மக்கள் இன்னமும் கூட தமது அடிப்படைத் தேவைகளைப் பெறவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார வெட்டு, உணவுப் பொருட்கள், மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகின்றன. உங்களால் உங்கள் பிரசைகளுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. அப்படியிருக்க இவற்றையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என எவ்வாறு நம்புகிறீர்கள்?

பதில்: நீங்கள் பாருங்கள், எமது அரசாங்கம் மட்டுமல்ல, ஒவ்வொரு அரசாங்கமும் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இந்தக் கட்டத்தில் எமக்கு பணத் தட்டுப்பாடு உள்ளது. எமது எண்ணெய் இறக்குமதிக்கு கொடுப்பனவு செய்வதற்காக மற்றைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கொடுப்பனவுகளைச் செய்வதிலும், இறக்குமதிகளை விடுவிப்பதிலும் தாமதம் நிலவுகின்றது. இந்த அடிப்படைத் தேவைப் பொருட்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் பொதுமக்களுக்கு கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது நாம் மின்சார வெட்டின் நேரத்தைக் குறைத்துள்ளோம். இறக்குமதிகள் வந்தடைந்ததும் விரைவில் எரிபொருள் நிலையங்களுக்கு அவற்றை வழங்குவோம். உலக வங்கியும் ஏனைய நிறுவனங்களும் எமக்கு தேவையான மருந்து வகைகளைப் பெறுவதற்கு உதவியளிக்க உள்ளன. மக்களுக்கு தேவையான உணவு இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். பிரச்சினைகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு இவை தொடர்ந்து கிடைப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி விரைவில் தீரும் என்ற நம்பிக்கை எமக்கு ஓரளவு இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும், அமைச்சரவையும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதியாக இருக்கும் வரை இதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

கேள்வி: இந்த அரசாங்கம் இந்த நெருக்கடியை விரைவில் தீர்க்கும் அல்லது இயல்பு வாழ்க்கையை மீட்கும் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அதைச் செய்வதற்கு உங்களிடம் என்ன குறிப்பான திட்டம் உள்ளது?

பதில்: உடனடித் தீர்வு என்று சொன்னால், சில நாடுகள் எமக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதுடன், அவை அதற்கு சாதகமாகப் பதிலளித்துள்ளன.

கேள்வி: உங்கள் அரசாங்கம் இந்த வருடத்துக்குள் இந்தத் தட்டுப்பாடுகளை நீக்கி, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என நினைக்கிறீர்களா?

பதில்: ஆம். அதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நாம் மக்களைப் பொறுமையாக இருக்கும்படி கேட்கிறோம். ஏனென்றால் ஒருகால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதும், ஏராளமான முதலீடுகளையும் அபிவிருத்திகளையும் செய்வதற்கு நாம் திட்டமிட்டிருக்கிறோம். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஒரு வழித்தடம் உள்ளது. இப்பொழுது சற்று அமைதி தேவை. நாம் மட்டுமல்ல, எந்தவொரு அரசாங்கமும் இந்த நிலையையே எதிர்நோக்குகின்றது. ஆனாலும் இந்த அரசாங்கம் உறுதியாக இருப்பதால் எம்மால் இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க முடியும். இதிலிருந்து நாம் வெளிவருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கேள்வி: எந்தெந்த நாடுகளிடம் நீங்கள் பொருளாதார உதவி கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்கள்?

பதில்: நாம் பல நாடுகளுடன் பேசியிருக்கிறோம். இங்குள்ள அயல்நாட்டுத் தூதுவர்களுடன் அடிக்கடி பேசி வருகின்றோம். நிதியமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதற்குப் புறம்பாக பல தலைவர்களுடன் பேசி வருகின்றார். எல்லோரும் எமக்கு உதவுவதாக உறுpதியளித்துள்ளதுடன், இப்பொழுது அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

கேள்வி: அரசியல் அரங்கில் ஐக்கிய மக்கள் சக்தி உங்களுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கிறது. ஒரு காலத்தில் உங்களுக்கு விசுவாசமாக இருந்த உங்களது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க இருக்கிறார்கள். உதாரணத்துக்கு உதய கம்மன்பொல, விமல் வீரவன்ச, ரிறான் அலஸ் ஆகியோரைக் கூறுகின்றேன். இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: எனக்கு எதிராக அவர்கள் இதைச் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அது என்ன காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு மட்டும் அது தெரிந்திருக்கக்கூடும். அவர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை. ஆனால் அவர்களைக் காணும்போது நான் அவர்களுடன் பேசுவதுண்டு. ஆனால் அவர்கள் தமது தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் என்னிடம் வந்து பேச வேண்டும். அவர்கள் எனக்கு எதிராகப் போவதற்கு முன் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது சரியான செயலாக இருக்கும். இன்று கூட அவர்களது பிரச்சினைகள என்ன என்பது குறித்து உரையாடுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் இது அவர்களைப் பொறுத்த விடயம்.

கேள்வி: உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக கம்மன்பொல கூறியிருக்கிறார். நீங்கள் பிரதம மந்திரி பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக சில தரப்புகளிடம் கூறியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது உண்மையா?

பதில்: இந்த நிமிடம் வரை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் எனக்கு இருக்கிறது. ஆனால் இது மாறுமோ என்பது எனக்குத் தெரியாது. இதெல்லாம் அரசியல். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் கட்டாயம் போக வேண்டுமென்று கருதினால் நான் போய் விடுவேன். இது பற்றி வேறு பேச்சுக்கு இடமில்லை.

கேள்வி: அப்படியானால் நீங்கள் 113 ஆசனங்களின் பெரும்பான்மையை இழந்தால் பதவி விலகி விடுவீர்கள்?

பதில்: ஆம், நான் செய்வேன். அதற்குப் பிறகு நான் ஏன் எனது பதவியை வைத்திருக்க வேண்டும்? நான் தொங்கிக் கொண்டிருக்க விரும்பவில்லை. நான் அப்படியான ஒரு தலைவன் அல்ல. 2015 இல் நான் தோற்ற பின்னர் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் விரும்பியதால் திரும்பி வந்தேன். நான் ஒரு ஆணையின் மூலமே திரும்பி வந்தேன்.

கேள்வி: நீங்கள் உங்கள் பெரும்பான்மையை இழந்தால் அதன் பின்னர் உங்கள் திட்டம் என்ன? நீங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்வீர்களா?

பதில்: இது எவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. நாங்கள் பெரும்பான்மையுடன் இருந்தால் அரசாங்கத்தில் தொடர்வோம். நாம் பெரும்பான்மையை இழந்தால் எதிரணியில் சென்று அமர்வோம். எதிர்க்கட்சி என்பது எனக்கு அந்நியமானதல்ல.

கேள்வி: சரி, இப்பொழுது அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது. உங்களது அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவது உங்களுக்குக் கேட்கிறதா?

பதில்: இது ஜனநாயகம். இது முதல் தடவையும் அல்ல. முன்பும் எனக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் எனக்கெதிராகக் கதைப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால் பல வருடங்களாக அவர்களுக்கு நாம் சேவையாற்றியுள்ளதால் தேர்தல் என்று வரும்போது மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

கேள்வி: ரணில் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றி ரணில் விக்கிரமசிங்கவுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. இதில் ஏதாவது உண்மை உள்ளதா?

பதில்: அப்படியெல்லாம் இல்லை. நான் அது சம்பந்தமாக அவருடன் எதுவும் பேசவில்லை. சஜித்துடனும் கதைக்கவில்லை. சஜித் பிரதமராக அல்ல, ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து, 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வரப்போவதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டீர்கள். அதற்கு என்ன நடந்தது?

பதில்: 19 ஆவது 20 ஆவது திருத்தங்களின் சில சரத்துகளை இணைத்து 21 ஆவது சட்டத் திருத்தத்தினைக் கொண்டு வருவது பற்றி ஆராய்வதற்காக ஒரு உப குழு அமைக்கப்பட்டுள்ளது. அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு கொஞ்சக் காலம் எடுக்கும். அதுவரையும் மக்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு வாக்களித்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி: எனது கடைசி கேள்வி. உங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு மகன் இருக்கிறார். அவரது அரசியல் காலத்தில் தற்போதைய நிலைமை முடிவுக்கு வரும் என நினைக்கிறீர்களா?

பதில்: அது அவரைப் பொறுத்த விடயம். அவர் (நாமல்) தனது தந்தையாரின் பெயரையோ, சித்தப்பாவின் பெயரையோ அல்லது பாட்டனாரின் பெயரையோ அரசியலுக்காக விற்க முடியாது. அவர் மக்களுடன் வர வேண்டும். நீங்கள் மக்களுடன் இருந்தால் எவரும் உங்களை அகற்ற முடியாது. இதுதான் எனது அனுபவம். நான் மக்களுடன் இருந்தேன், இப்பொழுதும் இருக்கின்றேன். 55 ஆண்டுகளாக நான் மக்களுடன் இருக்கின்றேன். இதை எவரும் மறுக்க முடியாது. 1970 களில் இருந்து ஒவ்வொரு நாளும் இன்று வரை மக்களுக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். தொடர்ந்தும் அதைச் செய்வேன்.