எம்.எஸ்.தீன் –
இலங்கையை புதியதொரு வழியில் ஊழல், மோசடிகளும், இனவாதமம் போன்றனவும் இல்லாததொரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கில் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள தன்னார்வ புரட்சி காரணமாக பிரதமர் பதவியை மஹிந்தராஜபக்ஷ இராஜினாமாச் செய்துள்ளார்.
ஜனாதிபதி கோத்பாய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டுமென்ற கோஷங்களும் நாளுக்கு வலுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ரணில் விக்கிரசிங்க இன்றைய நெருக்கடியான அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை கையாளக் கூடிய திறமையும், சர்வதேசத்தின் மதிப்பையும் பெற்றவராக இருந்தாலும், அவர் நாட்டின் சொத்துக்களை சூறையாடிய, நாட்டை இனவாத சகதியில் திட்டமிட்டு தள்ளிவிட்ட கும்பலை தப்பிக்கச் செய்திடுவார்.
எக்காரணம் கொண்டும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாதென்ற எண்ணத்தை மக்களும், மதத் தலைவர்களும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமனம் செய்துள்ளமை ராஜபக்ஷக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே.
அவர் தொடர்ந்தும் இதனையே செய்து கொண்டிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.ஜனாதிபதி கோத்தாபாய ரணிலை பிரதமராக நியமனம் செய்த போதிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியுள்ளது.
ரணில் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர். ஐ.தே.க அத்தேர்தலில் தேசியப் பட்டியலில் மாத்திரம் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. அதன் ஊடாக ரணில் பாராளுமன்றத்திற்கு சென்றார். அதனால், ரணிலுக்கான பெரும்பான்மையை மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், மொட்டுக் கட்சியை பொறுத்த வரை அதற்குள் பல அணிகள் உள்ளன. பிரதமர் கனவைச் சுமந்தவர்களும் உள்ளனர். அத்தோடு மொட்டுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்ட 11 கட்சிகள் சுயமாக செயற்படுவதற்கு முடிவு செய்துள்ளன. மொட்டும், அதன் கூட்டுக் கட்சிகளும் தங்களுக்குள் ஒரு புதிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டவர்கள். அதனால், ரணிலுக்கு எந்தளவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற கேள்வியும் உள்ளது. ஆயினும், ரணிலை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்கள்.
எதிர்க்கட்சியில் இருந்து வேறு ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் தங்களது தலைக்கு ஆபத்து என்பதனையும் அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
தனிடையே ரணிலை பிரதமராக நியமனம் செய்துள்ளமையை கலாநிதி ஓமல்பே சோபித தேரர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட மதத் தலைவர்களும் எதிர்க்கின்றனர். அவரின் நியமனம் ஜனநாயகத்திற்கு விரோதமானதென்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், எதிர்க்கட்சிகளும் ரணிலை பிரதமராக நியமனம் செய்துள்ளமையை எதிர்க்கின்றன. இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிள் மேலும் மோசமடையக் கூடுமெனலாம்.
இத்தகையதொரு அரசியல் நெருக்கடியில் ரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்பதற்குரிய முயற்சிகளில் ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷக்களும், அவர்களின் விசுவாசிகளும் ஈடுபடச் செய்வார்கள். ஆளுங் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்வதற்குரிய முயற்சிகளை எடுப்பதுடன், எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ரணிலுக்கு பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளும் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.இதனிடயே ரணிலின் தலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதொரு அரசாங்கத்தை உருவாக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கப் போவதில்லை. இதனால், ரணிலுக்கான பெரும்பான்மையை நிருபிப்பதற்கு எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகவிலை கொடுக்கப்படலாம்.அந்த வகையில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் இலக்கு வைக்கப்படலாம். ரணிலின் தலைமையிலான அரசாங்கத்தில் தாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டாலும், இவர்களின் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணிலுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பல தடவைகள் கட்சியினதும், தலைவர்களினதும் தீர்மானங்களுக்கு மாற்றமாக செயற்பட்டுள்ளார்கள். நாட்டின் இன்றைய நெருக்கடியான சூழலுக்கு இவர்களும் காரணமென்று தெரிவிக்கப்படுகின்றன.
20வது திருத்தச் சட்ட மூலம் முதல் அரசாங்கத்தின் அனைத்துக் கருமங்களுக்கும் ஆதரவாக செயற்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்காக அதிகவிலைகளையும் பெற்றுள்ளார்கள். இதனால், இவர்கள் ராஜபக்ஷக்களின் பிடிக்குள் ஏற்கனவே சிக்கியுள்ளார்கள். அதிலிருந்து வெளியே வரக் கூடிய எந்தவொரு சமிக்கையையும் காணவில்லை.
இன்று நாட்டில் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி குறித்து முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. தலைமறைவானவர்கள் போன்றே உள்ளார்கள்.
இவர்களின் மீது முஸ்லிம்களிடையே பலத்த எதிரலைகள் உள்ளன.அதனால், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும், இன்று மக்களிடையே ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்திற்கான எண்ணத்தில் மாற்றம் ஏற்படப்பொவதில்லை.
இதன் பின்னணியில் சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், மதத் தலைவர்கள், தொழிற் சங்கங்கள் என பரந்த ஆதரவுத்தளமொன்று உள்ளது. இதனால், மக்கள் விரும்பும் மாற்றம் ஏற்படும் வரை நெருக்கடிகளும், ஜனாதிபதிக்கு எதிரான கோசங்களும், ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களுக்கு எதிரான கோஷங்களும் எழுந்த வண்ணமே இருக்கும்.
அதனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருடிக்கடி இலகுவில் தீர்ந்துவிடுமென்று இப்போதைக்கு நம்புவதற்கில்லை.எதனையும் கவனத்திற் கொள்ளாது தங்களின் சுயநலத்திற்காக மாத்திரம் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவும் கடந்து போகுமென்ற எண்ணத்தில் சுயநல நோக்கத்தோடு முடிவுகளை எடுக்கலாம்.
அதனால், முஸ்லிம்களிடையே தமது அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தான விளிப்புணர்வு ஏற்பட வேண்டும். முஸ்லிம்களின் அரசியலிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் கட்சிகள் என்று கோடுகளை போட்டுக் கொண்டு சமூகத்திற்கு விரோதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளை வளர்க்க முடியாது.முஸ்லிம் கட்சிகள் தமது கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பல தடவைகள் அறிவித்துள்ளன.
மக்களை ஏமாற்றுவதற்காக கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்கள். இதனைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை. இன்று தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து மௌனமாக இருக்கின்றார்கள். இதனால் யார் சொல்வது உண்மை என்று மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.
இவ்வாறு மக்களை குழப்பத்திற் ஆழ்த்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சிகளினதும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசியல் நடவடிக்கைகள், சமூகப் பொறுப்புக்கள் குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் கட்சி அரசியலுக்குள் சிக்கிக் கொண்டு, ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்று பிரதேசவாதம், மதவாதம், இனவாதம் பேசிக் கொண்டிருக்க முடியாது.
நாம் இலங்கையர் என்ற கோட்பாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பொறுப்பற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்க முடியும். இதனைச் செய்யாது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானமும் தற்காலிகமானதாகவே இருக்கும். அதனால், தன்னார்வப் புரட்சி முஸ்லிம் அரசியலிலும் ஏற்பட வேண்டும். முஸ்லிம் அரசியலையும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இணைந்திருங்கள்