அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வாராந்தம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, எதிர்வரும் 3 மாதங்களுக்கு இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் விடுமுறையின்போது விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.