மனிதர்களின் சுயநலத்தால் தவறான சேர்க்கையில் பல புதிய நாய் இனங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் பிறவி குணம் மாற்றப்பட்டு ஆக்ரோஷமாகி உள்ளன. இதனால் உலக நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களின் எண்ணிக்கை அதிகம். இனப்பெருக்க காலத்தில் நாயை தனியே வைத்திருப்பது, அடித்து கட்டிப்போட்டு வளர்ப்பது உள்ளிட்ட பல தவறுகளை நாய் உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். பல நாடுகளின் இன்றளவும் சட்டவிரோதமாக நாய் சண்டைகள் நடைபெறுகின்றன. இதற்காக குறிப்பிட்ட சில நாய் இனங்களுக்கு ஆபத்தான உணவு, போதை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. பல்வேறு உலக நாடுகளால் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட முக்கிய நாய் இனங்கள் குறித்துப் பார்ப்போம்.
அமெரிக்க பிட்புல்
அமெரிக்க நாட்டின் தெரு நாய் இனம் பிட்புல். நம்மூர் கோம்பைபோல அமெரிக்காவில் தெருவில் சுற்றித் திரிந்து குடிமக்களை கடித்து அச்சுறுத்தும் கொடூர நாய். மற்ற நாய்களை ஒப்பிடுகையில் வெறும் 30 கிலோ எடை கொண்ட பிட்புல், 1950களில் தெரு நாய் சண்டைகளில் பயன்படுத்தப்பட்டது. பாடி பில்டர்போல கட்டுடலுடன் வலம்வரும் பிட்புல் மனிதர்களின் சுயநலத்தால் சீரழிக்கப்பட்ட நாய் இனத்தில் முக்கியமானது. அமெரிக்கா, கனடாவின் சில பகுதிகள், டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட பகுதிகளில் பிட்புல் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திபெத்திய மாஸ்டிஃப்
திபெத் நாட்டைச் சேர்ந்த சிங்கம் போன்ற உருவம் கொண்ட பிரம்மாண்ட நாய் இனம் இது. ஹாங்காங், சிங்கப்பூர், ஆஸி., நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இதற்கு தடை உள்ளது. நூறு கிலோ எடை கொண்டது. செல்வந்தர்கள் மட்டுமே வாங்கக் கூடிய விலையில் இது விற்கப்படுகிறது. ஆனாலும் பல நாடுகளின் செல்வந்தர்கள் இதன் தனித்தன்மையான உருவம் காரணமாக லட்சக் கணக்கில் பணம் செலவழித்து இதனை வளர்க்கவே செய்கின்றனர். இதன் ஒரு கடி, மனித எலும்பை சுக்குநூறாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியோபாலிடன் மாஸ்டிஃப்
இத்தாலியைச் சேர்ந்த நியோபாலிடன் மாஸ்டிஃப்-ஐ கொடூர நாய்களின் அரசன் என்றே சொல்லலாம். மலேசியா, கத்தார், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. 90 கிலோவைத் தாண்டும் இதன் எடை காண்போரை மலைக்க வைக்கும். கருப்பு வெல்வெட் துணியின் மடிப்புகள் போல இதன் முகம் முழுவதும் மடிப்புகள் அமைந்திருக்கும்.
டொசாகா ஷிகுகு
ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஆக்ரோஷமான நாய் இனம். அதிகபட்சமாக 60 கிலோ எடை இருக்கும். இதன் குரைப்பு ஒலி அந்நியர்களை அலறி ஓடச் செய்யும். ஆஸி., மால்டா, ஐஸ்லாந்து, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில்
டொசாகா ஷிகுகு வளர்க்கவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளையும் வயோதிகர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதால் மேற்கண்ட நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது.
ஃபீலா பிரசிலியோ
பெரிய உருவம் காரணமாக பிரேசில் நாட்டின் மாஸ்டிஃப் எனவும் அழைக்கப்படும் ஃபீலா பிரசிலியோ, எஜமானருக்கு விஸ்வாசமான நாய். இது இரையை கொல்லாமல் எஜமானர் வரும்வரை கட்டிக்காக்கும். பிரிட்டன், ஆஸி., நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் இந்த நாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 80 கிலோ எடை, காண்போரை கலங்கடிக்கும் பெரிய தலை, கோரைப் பற்கள் என ஃபீலா வீதியுலா வந்தாலே பாதசாரிகள் பதறி ஓடுவது நிச்சயம்.
போர்பொல்
பிரான்ஸ், மலேசியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள உலகின் ஆபத்தான நாய் இனங்களுள் ஒன்று போர்பொல். தென்னாப்ரிக்க நாய் இனமான இது பெரிய நாய் இனமான மாஸ்டிஃப் இனத்தைச் சேர்ந்தது. 90 கிலோ எடை கொண்ட போர்பொல்-ஐ குட்டியாக இருக்கும்போது சரியாக வளர்க்காவிட்டால் வாலிபத்தில் இதன் ஆக்ரோஷத்தை யாராலும் தாக்குபிடிக்க முடியாது.
இணைந்திருங்கள்