போராட்டத்துக்குள் இருந்து ஒரு தலைவன் உருவாவான் என்பது பொதுவான ஒரு கூற்று. உலக நாடுகள் பலவற்றில் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றபோது நடந்துள்ளதும் இதுதான். ஓன்றில் போராட்டத்தை அவன் வழி நடத்தியவனாக அல்லது போராட்டக்காரர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவனாக அல்லது போராட்டக்காரர்களுக்கு இரகசிய உத்தரவுகளை தலைமறைவாக இருந்து கொண்டு வழங்கியவனாக அவன் இருந்திருக்க வேண்டும்.

அவ்வாறான ஒரு நபரை போராட்டக்காரர்கள் கடைசி கட்டத்தில் மக்களுக்கு அடையாளம் காட்டுவார்கள்.

அப்படி நடந்திருந்தால் இன்று எழுந்துள்ள எந்தப் பிரச்சினைக்கும் இடமே இல்லை. போராட்டம் தீவிரமாக இடம்பெற்ற போதும், அது தொய்வு நிலைகளை அடைந்த போதும் நான் இப்படித்தான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இலங்கையில் விடிய விடிய மூன்று மாதங்களுக்கு மேல் போராடியவர்கள் மத்தியில் அவ்வாறான எந்தத் திட்டமும் இப்போது இல்லை என்பதை அவதானிக்கும் போது வேதனையாக உள்ளது.

ஒரு நாட்டின் தலைமைக்கு எதிராக மக்கள் கொட்டும் மழையிலும், கொழுத்தும் வெய்யிலிலிலும் ஊண், உறக்கம், மாற்றி உடுக்க உடை என்பன இன்றி இரவு பகலாகப் போராடுவது, அந்தப் போராட்டம் வெற்றி அடைந்த பின் அரசியல் யாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஒரு தலைவனைத் தெரிவு செய்வதற்காக அல்ல.

மக்கள் எழுச்சிப் போராட்டம் என்பது இலங்கைக்கு புதிய விடயம். ஆனால் உலகுக்கு இது ஒரு புதிய விடயம் அல்ல. இதேபோல் பல போராட்டங்களை உலக வரலாற்றில் பல நாடுகளில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம்.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான போராட்டங்கள் வரலாற்றில் ஒரு போதும் தோல்வியைத் தழுவியதில்லை. அவை வெற்றியைத் தான் தழுவி உள்ளன. ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியின் பின்னரும் குறைந்த பட்சம் ஒரு சில தினங்களுக்காவது சம்பந்தப்பட்ட நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஆட்சி முறை அது ஜனநாயகமோ, மன்னராட்சியோ அல்லது சர்வாதிகாரமோ முடங்கிப் போவதுதான் வழக்கம். உரிய ஆட்சி முறையின் கீழ் மீண்டும் ஒருவரைத் தெரிவு செய்ய மாதக் கணக்கில் தொடராகப் போராட வேண்டிய தேவை இல்லை. அடுத்த தேர்தல் வரை நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையாக இருந்து ஒரு ஆட்சியாளரை அல்லது ஆளும் கும்பலைத் தெரிவு செய்யலாம்.

நடைமுறையில் உள்ள ஆட்சி முறைகளுக்கும் அரசியல் யாப்புக்கும் அப்பாற்பட்ட விதத்தில் மக்கள் மத்தியில் இருந்து ஒரு தலைவனைத் தெரிவு செய்வதற்கு தான் போராட வேண்டும்.

போராட்டத்தில் மக்கள் வெற்றி அடைந்த பின் தலைமறைவான ஒரு தலைவன் முறைப்படி இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவதும் எதிர்ப்பார்ப்பதும் முற்றிலும் மடத்தனமானது என்பதே எனது கருத்தாகும். அதுவும் பாராளுமன்றத்தை இன்னமும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விசுவாசமான குழுவை தன்பால் கொண்டிருக்கும் ஒருவரை வைத்துக் கொண்டு அதே பாராளுமன்றம் மூலம் இன்னொருவரை தெரிவு செய்ய முயற்சிப்பது வீணாணது. மக்களுடைய கருத்துக்கும் விருப்புக்கும், பாராளுமன்றத்தின் கருத்துக்கும் விருப்புக்கும் இடையில் மிகப் பெரிய விரிசல் இருக்கின்ற நிலையில் இது மக்கள் விருப்பப்படி சாத்தியமாகும் விடயமும் அல்ல.

குறைந்த பட்சம் இவர்தான் அடுத்த தலைவராக வரவேண்டும் என்ற ஒரு கணிப்பு போராட்டக்காரர்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவரை உரிய நேரத்தில் மக்களுக்கு அறிமுகம் செய்தும் இருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் தடுமாறிய இடம் இதுதான். அதிகார பீடங்களுக்குள் பிரவேசித்ததும் போராட்டம் கட்டுக் கோப்பை இழந்து தடுமாறத் தொடங்கியது. அங்குள்ள வசதிகளை பகிரங்கப்படுத்தி அதை வருபவர்கள் எல்லாம் அனுபவிக்கலாம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி கோமாளித் தனமாக நடந்து கொண்டு அல்லோலகல்லோலப்பட்டது முதிர்ச்சியற்ற அசிங்கமான செயல்.

எந்த ஒரு நாட்டிலும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் இல்லம், ஜனாதிபதி மாளிகை என்பன இவ்வாறான வசதிகளோடு தான் அமைக்கப்பட்டிருக்கும். அதுதான் நியதி. அதை புரிந்து கொள்ளாமல் இலங்கையில் மட்டும் தான் இப்படி உள்ளது என்ற நினைப்பில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் தான் ராஜபோகம் அனுபவித்துள்ளார்கள் என்று மக்களுக்கு காட்ட நினைத்ததும் கோமாளிகளாக நடந்து கொண்டதும் மடத்தனமானது. இந்த பலவீனத்தை தான் அரச தரப்பு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.

போதாக்குறைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நமது அரசியல் பண்டிதர்கள் எதிர்ப்பார்த்ததும் கோரிக்கை விடுத்ததும் பதவியில் இருந்து துரத்தப்பட்டும் கூட ஆளும் தரப்பின் கரங்கள் ஓங்கி நிற்க வசதியாயிற்று. இந்தக் கோரிக்கையும் எதிர்ப்பார்ப்பும் தேவையில்லாத ஒன்று. அதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டமை அதை விட மடத்தனமானது.

தனக்குரிய உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வாழ முடியாது, தனது தனிப்பட்ட இல்லத்திலும் வசிக்க முடியாது, அலுவலகத்துக்கு வர முடியாது, அங்கிருந்து எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது, தொலைக்காட்சியில் தோன்றியாவது மக்களை சந்திக்க முடியாது, வானொலி வழியாகக் கூட மக்களோடு தொடர்பு கொள்ளவும் முடியாது, கடைசியாக நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலை. இதற்கு மேல் உத்தியோகப்பூர்வ இராஜினாமாக் கடிதம் மட்டும் ஒரு கேடா. என்ன மன்னாங்கட்டிக்கு அது தேவை.

இதில் ஒரேயொரு சூட்சுமம் மட்டும் தான் ஒளிந்திருக்கின்றது. அது தான் வரலாற்றை மாற்றி அமைக்கும் பதிவு. ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமாச் செய்தார் என்று வரலாறு எழுதப்பட வேண்டும். மாறாக உண்மையில் அவர் பதவியில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார் என்ற தகவல் வரலாற்றில் மறைக்கப்பட வேண்டும். இது தான் ஆளும் தரப்பின் எதிர்ப்பார்ப்பு. நமது அரசியல்வாதிகளும் மடத்தனமாக அதற்கான அவகாசத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்கள் மத்தியில் இருந்து ஒரு தலைவரைத் தெரிவு செய்து போராட்டத்தின் சரியான கட்டத்தில் அவரை மக்களுக்கு அறிமுகம் செய்து, போராட்டம் வெற்றி பெற்ற கையோடு தேவையற்ற களியாட்டத்தில் ஈடுபடுவதை விட்டு விட்டு இவர்தான் அடுத்த தலைவர் என்று அவர் பதவியேற்பதற்கான வழிமுறைகளை பலவந்தமாகவாவது கையாண்டிருந்தால் போராட்டம் தடம் புரளாமல் இருந்திருக்கும். இப்போது அது தடம் புரண்டடு விட்டது.

எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவித்து சகிப்புத் தன்மையோடு போராடியவர்கள் மக்கள். ஆனால் இப்போது அடுத்த தலைவரை தெரிவு செய்யப் போவது எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்காத இந்த நாட்டின் அதே ஊழல் அரசியல்வாதிகள். இது தான் போராட்டத்தின் இன்றைய பரிதாப நிலை.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு போய் சேராது என்பது போல் போராட்டத்தின் பலன் மக்களைச் சென்றடையாமல், மீண்டும் அரசியல்வாதிகளுக்கு பேரம் பேசும் ஒரு வாய்ப்பை வழங்கி எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என அவர்கள் எஞ்சிய காலத்தில் இன்னும் எதையாவது சம்பாதித்துக் கொள்ள வழி அமைத்துவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நடக்காது என்ற உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாது.