ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஜனாதிபதி தனி விமானத்தில் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் வெடித்துள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி தனது பாரியாருடன் நாட்டில் இருந்து நேற்று அதிகாலை வெளியேறினார். இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் மாலைதீவு சென்றிருந்தார்.

மாலைதீவில் ஆடம்பர ஹோட்டலில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு உள்ளூர் நேரப்பட் 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்இ பாதுகாப்பு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பயணத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் பதவி விலகுவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி இதுவரையில் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.