நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட தாம் ஆக்கிரமித்துள்ள அரச கட்டிடங்களை கையளிக்க காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற சபாநாயகரின் அறிவிப்பை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

போராட்ட களத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜீவந்த பீரிஸ், போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ள அரச கட்டிடங்களை அதிகாரிகளிடம் கையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடி நிலையைத் தணிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று (ஜூலை 13) பாராளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளமையால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், மேற்படி வளாகத்தை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

அமைதியான போராட்டங்களின் உரிமைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தும் அதே வேளையில், அது அரசியலமைப்பிற்கு முரணான சட்டமற்ற அல்லது அராஜகத்தின் சூழ்நிலையை ஆதரிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து சேதம் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயற்சிப்பது அமைதியான போராட்டமாக இருக்காது” என்று சட்டத்தரணிகள் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இலங்கை மக்கள், குறிப்பாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அமைதியாக இருக்குமாறும், இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் உறுதியளித்த அமைதியான அதிகார மாற்றத்திற்கு இடமளிக்குமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.