முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நாட்டில்பதுங்கியிருக்கும் நிலையில் சிங்கப்பூர் தூதரகங்களுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன. 

போர்க் குற்றங்களில் தொடர்புடைய கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு அடைக்கலம் அளித்திருப்பதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்து உலக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கேட்டுமே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் நகரங்களில் சிங்கப்பூர் தூதரகங்கள் முன்பாக  18 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழர்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளனர். 

ஏனைய சில நாடுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடாகி வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணமாகவே வந்துள்ளார் என்றும் அவர் அந்நாட்டில் தஞ்சம் கோரவில்லை. அவ்வாறு தஞ்சம் வழங்கும் சட்டங்கள் அங்கு கிடையாது என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அவருக்கு சாதாரண வருகை அனுமதியே  வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இலங்கையர்கள் எவரும் சிங்கப்பூரில் வீஸா இன்றியே முப்பது நாட்கள் தங்கியிருக்க முடியும். தற்சமயம் அங்கு தங்கியுள்ள கோட்டாபய வேறு நாடுகளுக்கு வெளியேற முயற்சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிங்கப்பூரின் சட்டங்கள் அந்நாட்டில் தங்கியிருப்போர் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதைத் தடைசெய்துள்ளதால் கோட்டாபயவுக்கு எதிராக அங்குள்ள ஈழத் தமிழர்களால் பெருமெடுப்பில் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.