இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை பதவியேற்க உள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதில் ஜனாதிபதியாக கடமையாற்றிய ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி, 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டார்.

1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு குருந்துவத்தை பிரதேசத்தில் பிறந்த ரணில் ஷ்ரியன் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

சட்டத்தரணியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய உறுப்பினராக பியகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர், தனது 45 வருட பாராளுமன்ற வாழ்க்கையில் பிரதியமைச்சர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் எனப் பல சந்தர்ப்பங்களில் பதவிகளை வகித்த ரணில் விக்கிரமசிங்க, இதுவரை நிறைவேற்று ஜனாதிபதி பதவியை மாத்திரமே இழந்துள்ளார். .

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அதிகூடிய பதவிகளை வகித்த அரசியல்வாதிகளில் ரணில் விக்கிரமசிங்க ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்து சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போதிலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தோல்வியடைந்தார்.

1999ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முதன்முறையாக களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தோற்கடிக்கப்பட்டதுடன், 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரைத் தோற்கடித்து மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதல் தடவையாகத் தெரிவு செய்யப்படவில்லை.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கடந்த மே மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பிரதமரானார்.

பல சவால்களுக்கு மத்தியில், அவர் பதவியை ஏற்றுக்கொண்டார், கடந்த இரண்டு மாதங்களில், நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு பல அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்ததன் காரணமாக ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தற்போது 73 வயதாகும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து 4 தசாப்த கால அரசியல் வாழ்வில் உச்சக்கட்டத்தை அடையவுள்ளார்.

இதேவேளை, 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும் அரச நிறுவனங்களை கைப்பற்றுவதும் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.