சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
சவுதியில் சில வாரங்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் கடந்த 9 ஆம் திகதி அதிகரித்துடன் போராட்டகாரர்கள், ஜனாதிபதி மாளிகை , அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு அங்கு தங்கியிருந்தனர்.
அரசியல் நெருக்கடி நிலைமை அதிகரித்த சூழலில் கோட்டாபய ராஜபக்ச, விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவு சென்று அங்கிருந்த சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றதுடன் அங்கிருந்த பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தது.
அத்துடன் அவருக்கு அரசியல் புகலிடம் எதுவும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் தங்கியிருக்க வழங்கிய அனுமதி காலம் முடிவடையும் நிலையில், அவர் அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்ல உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணைந்திருங்கள்