அமெரிக்க தூதரகத்தில் சேவையாற்றும், அமெரிக்க பிரஜையான பெண் ஒருவரின் கைப்பையை, நடு வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கொழும்பு – 7, கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர்.

கொள்ளையர்கள் கொள்ளையிட்ட கைப்பையில், குறித்த தூதரக பெண்ணின் 1250 டொலர் பெறுமதியான அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி, 20 ஆயிரம் ரூபா பணம், அடையாள அட்டை, இராஜதந்திரிகள் அடையாள அட்டை, வீட்டின் இலத்திறனியல் திறவுகோள் ஆகியன இருந்துள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 4 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, தண்டனை சட்டக் கோவையின் 380,394,396 ஆம் அத்தியாயங்கைன் கீழ் குற்றங்கள் நிகழ்ந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளி பதிவுகளை அடிப்படையாக்கொண்டு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி இரவு, அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அமெரிக்க பிரஜையான பெண் ஒருவர், கொழும்பு 7 கறு வாத்தோட்டம் பகுதியில் தான் வசிக்கும் தொடர்மாடி வீட்டுத் தொகுதியிலிருந்து அருகில் உள்ள இடமொன்றுக்கு நடந்து சென்றுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கைப்பையை கொள்ளையிட்டதாக கூறப்படுகின்றது. கொள்ளையை அடுத்து அச்சத்தில், செல்லவேண்டிய நிகழ்வுக்கு செல்லாமலே தனது வீட்டை நோக்கி ஓடிச் சென்றுள்ள குறித்த அமரிக்க பெண், அங்கிருந்து விடயத்தை பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக குறித்த தொடர்மாடிக்கு சென்று அவரிடம் முறைப்பாட்டை பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது குறித்த முதல் தகவல் அறிக்கையே இன்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.