சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எதிர்வரும் டிசம்பர்மாத தொடக்கத்தில் எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ள போதிலும், சில காரணங்களால் அது அடுத்த ஆண்டு ஜனவரிமாதத் தொடக்கம் வரையில் தாமதிக்கப்படக்கூடும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, இலங்கைக்கான நீடித்த கடனுதவிச் செயற்திட்டம் தொடர்பில் சர்வசே நாணய நிதிய இயக்குநர் சபையின் இணக்கப்பாடு எப்போது எட்டப்படுமென ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கையிலேயே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அதனுடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அந்தவகையில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, இவ்விவகாரத்தில் அந்நாடுகள் நேர்மறையான பிரதிபலிப்பைக் காண்பித்திருக்கின்றன.

இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கருத்தின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டுவதானது அடுத்த வருடம் ஜனவரி மாதம்வரை தாமதமடையக்கூடும். எதுஎவ்வாறிருப்பினும் அண்மையில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொண்டிருந்ததுடன், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டம் குறித்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். எனவே நாம் இவ்வுதவியை இயலுமானவரை மிகவும் விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளையே முன்னெடுத்துவருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.