ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக ஒரு தனி அமைப்பு ஏற்படுத்த பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பாகிஸ்தானுக்குள் எதிர்மறையான ஊடுருவலைத் தடுக்க பயனுள்ள எல்லை மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களை கவனிப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மொயீத் யூசுப், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மனை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலீபான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தை உலக நாடுகள்  அங்கீகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரிரு நாடுகளைத் தவிர, வேறு எந்த நாடும் இதுவரை தலீபான்களின் அரசை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.