வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அடுத்த வருடம் கொண்டாடப்படும் 75 ஆவது சுதந்திர தினத்தின் போது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கோப் – 27 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பிய நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்ற (10) ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கோப் – 27 மாநாடு, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்ததோடு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் புதிய சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனவரி, பெப்ரவரி மாதமளவில் இது தொடர்பான சட்டங்களைச் சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்புக்கு தமிழ்க் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.