மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 4 மாதங்களில் இலங்கை மின்சாரசபை ஒரு பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது. அதற்கான அவசியமும் இல்லை. மீண்டும் மின்கட்டண அதிகரிப்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் 2023 ஏப்ரலுக்கு முன்னர் சுமார் 30 நிலக்கரி கப்பல்களேனும் நாட்டுக்கு வருகை தர வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வருடம் நீண்ட மின் துண்டிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும் என்றும் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

காலநிலையை அடிப்படையாகக் கொண்டு மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்துள்ளது. எனினும் அந்த யோசனை கவனத்தில் கொள்ளப்படாமலேயே தற்போது மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு நாம் அனுமதி வழங்கினோம். தற்போது மீண்டும் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

மின் உற்பத்திக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு பதிலாக , நிலக்கரியை கொள்வனவு செய்தால் 50 சதவீத செலவினைக் கட்டுப்படுத்த முடியும். இது போன்று எம்மால் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

உலக சந்தையில் தற்போது நிலக்கரியின் விலை மெட்ரிக் தொன் 350 டொலரிலிருந்து 225 டொலராகக் குறைவடைந்துள்ள அதே வேளை , மசகு எண்ணெய்யின் விலை 40 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. எனினும் இதன் பயன்கள் எவையும் இலங்கை மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இதுபோன்ற விடயங்களை வெளிப்படுத்துவதால் , மின்சாரசபை மறுசீரமைப்பின் ஊடாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை செயழிலக்கச் செய்வதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும் அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்பட பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒருபோதும் செயற்படாது. ஆகஸ்ட் முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரசபை ஒரு பில்லியன் இலாபமீட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதாகக் கூறுவது நியாயமற்றது. அதற்கு ஆணைக்குழு ஒருபோதும் அனுமதி வழங்காது.

இது வரையில் நாட்டுக்கு 4 கப்பல்கள் வருகை தந்துள்ளன. எதிர்வரும் 6 ஆம் திகதி 5 ஆவது கப்பல் வரவுள்ளது. 2023 ஏப்ரலுக்கு முன்னர் சுமார் 30 நிலக்கரி கப்பல்களேனும் நாட்டுக்கு வருகை தர வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வருடம் நீண்ட மின் துண்டிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும். இது தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.