இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், இன்று பேச்சுவார்த்திகள் ஆரம்பிப்பதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (08.01) முற்பகல் நாட்டை வந்தடைந்தது.

தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திருமதி. அவுரமோன் சுப்தாவிதும் (Ms. Auramon Supthaweethum, Director General of the Department of Trade Negotiations) தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (09.01) மற்றும் நாளை (10.01) கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன. தாய்லாந்திற்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதோடு, தாய்லாந்திற்கான பிரவேசம் மூலம் நமது ஏற்றுமதிகளை தாய்லாந்து சந்தைக்கு மட்டுமின்றி மற்ற ஆசியான் (ASEAN) சந்தைகளுக்கும் எமது ஏற்றுமதிகளுக்கான பிரவேசத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போதுள்ள வர்த்தகத்திற்கான வரி அல்லாத வர்த்தகத் தடைகளை குறைப்பது என்பன இப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் ஆகும்.

தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கரும்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் வழிகள் திறக்கப்படும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு, இலங்கை சார்பாக பங்கேற்பதோடு, வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் திணைக்களம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதோடு, உள்நாட்டு வர்த்தக சபை மற்றும் கைத்தொழில் சங்கங்கள் முன்வைத்துள்ள குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.

உலகின் வர்த்தகம், மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தில் 30% பங்கு வகிக்கும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுமுயற்சியில் (RCEP) இணையும் அரசாங்கத்தின் இலக்கை நோக்கிய பயணத்தில் இந்த ஒப்பந்தம் ஒரு ஆரம்ப படியாக இருப்பதோடு, இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், முடிவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளின் அபிவிருத்தி முயற்சிகளின் முக்கிய அங்கமான சர்வதேச வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றத்தை அடையவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.