பங்களாதேஷில் (Bangladesh) நிலவி வரும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் அந்நாட்டு தலைமை நீதியரசர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவை தப்பிச் செல்வதற்கு கட்டாயப்படுத்திய மாணவர் போராட்டங்கள், அவர் பதவியில் இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட அதிக அதிகாரிகளையும் குறிவைக்கும் அளவுக்கு விரிவடைந்துள்ளன.
பதவி விலகா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று மாணவர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து தலைமை நீதியரசர் ஒபைத்துல் ஹசன் பதவி விலகியுள்ளார்.
மாணவர்களின் போராட்டம்
இந்த நிலையில், புதிய காபந்து அரசாங்கத்தின் ஆலோசகர் நஸ்ருல், போராட்டக்காரர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளதுடன் எந்தவொரு பொதுச் சொத்தையும் சேதப்படுத்த வேண்டாம் என்று அவர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்தரும் பதவி விலகியுள்ளார். ஆனால் பதவியின் முக்கியத்துவம் கருதி அவரது பதவி விலகல் ஏற்கப்படவில்லை என்று நிதி அமைச்சக ஆலோசகர் சலேஹுதீன் அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டாக்கா பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.எஸ்.எம். மக்சுத் கமலும் பதவி விலகியுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பதற்ற சூழ்நிலை
கடந்த ஜூலை மாதம் அரச வேலைகளில் ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆரம்பித்த போராட்டம், ஹசீனாவை வெளியேற்றும் பிரசாரமாக உருவெடுத்தது.
170 மில்லியன் மக்களைக் கொண்ட தெற்காசிய தேசமான பங்களாதேஷில்,15 ஆண்டு கால இடைவிடாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இந்த போராட்டத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை, ஹசீனா புதுடில்லியில் தஞ்சமடைந்துள்ளார்.
இணைந்திருங்கள்