நாட்டை காப்பற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அவசர அவசரமாக நாட்டை ஏலமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

துறைமுக நகர திட்டம் இந்த நாட்டின் திருப்புமுனை என சிலர் கூறுவதை கேட்க முடிகிறது.

வெளிநாடு ஒன்றுக்கு அடிமையான துறைமுக நகரை உருவாக்குவது எப்படி இலங்கைக்கு திருப்புமுனையாக இருக்கும் என கேட்க விரும்புகிறேன்.

இது திருப்புமுனையல்ல, இது காட்டிக்கொடுப்பு நடவடிக்கை. நாட்டை அடிமைப்படுத்தும் நடவடிக்கை. நாட்டை வெளிநாடுகளுக்கு அடிப்பணிய வைக்கும் நடவடிக்கை.

தற்போது எமது நாடு வெளிநாடுகளுக்கு ஏலமிடும் நிலைமைக்கு சென்றுள்ளது. ஒரு புறம் துறைமுகம் ஏலமிடப்படுகிறது.

மறுபுறம் துறைமுக நகரம் ஏலமிடப்படுகிறது. இன்னுமொரு புறம் எமது விவசாய காணிகள் ஏலமிடப்படுகின்றன.

பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாடுகள் எமது நாட்டை விழுங்க பார்க்கின்றன. நாட்டை காப்பற்ற போவதாக கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அரசாங்கம் நாட்டை காப்பாற்றது, நாட்டை ஏலமிட்டு, சிறிய தொகைக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்து வருகிறது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.