நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா அல்லது சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும். நீதிமன்ற தீர்மானத்தை பொறுப்புடன் செயற்படுத்துவோம் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். கொழும்பு துறைமுக நகரத்தை விசேட பொருளாதார வலயமாக உருவாக்க வேண்டுமாயின் புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களின் நலன் கருதி பொருளாதார ஆணைக்குழு உருவாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் புதிய சட்டங்கள் இயற்றுவது இதொன்றும் முதல் தடவையல்ல.1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொழும்பு பொருளாதார வலயமும் இவ்வாறான பின்னணியை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது. கொழும்பு பொருளாதார சட்டத்திற்குள் ஏனைய மாகாணங்களில் பொருளாதார வலயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் எவ்வித பிரச்சினைகளும் இதுவரையில் தோற்றம் பெறவில்லை.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம்மூலம் சபைமுதல்வரினால் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சர்வதேச வர்த்தகம், கப்பற் தொழில், முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரை கடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம் , வியாபார வழிமுறைகள், வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு, பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தற்போது அரசியல் நோக்கங்களுக்காக விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன. துறைமுக நகர நிலப்பரப்பு சீனாவிற்கு வழங்கப்படுவதாக போலியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பின் 3ஆம் அத்தியாயத்தின் நிர்வாக மாவட்ட சட்டத்திற்கமைய கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் மொத்த நிலப்பரப்பும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்துடையதாக்கப்பட்டுள்ளது. இதற்கான மூல ஆவணங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பிலான விசேட வர்த்தமானி 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

நாட்டின் பொதுச்சட்டத்திற்கு அமையவே கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அரசியலமைப்பிற்கு முரணான எவ்வித ஏற்பாடுகளும் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் உள்வாங்கவில்லை. வரி சட்டங்களில் மாத்திரம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் பிராந்தியம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா அல்லது சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இச்சட்ட மூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் எடுக்கும் தீர்மானத்தை அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுத்தும் என்றார்.