நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பாரிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு இருக்கின்ற வழிகள் பணம் அச்சிடுவதும் கடன் பெறுவதும் மற்றும் நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதும் மாத்திரமே என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று முறைகள் ஊடாக நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறையாது எனவும் மாறாக அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதனால் மாற்று வழியை நோக்கி மக்கள் செல்ல வேண்டியிருப்பதாகவும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

அந்த மாற்று வழியாக செயற்பட தேசிய மக்கள் சக்தி தயார் எனவும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி நிர்வகிக்க தகுதியுடையவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் அணியாக அல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றும் அணியாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.