தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று புரியவில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் இன்று எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். உங்களை நம்பித்தானே வாக்களித்தோம், இன்று என்ன நடக்கின்றது எனக் கடும் விரக்தியை வெளியிடுவதுடன், அரசின் பயணம் மாற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
கேஸ் இருக்கின்றதா, கிழங்கு இருக்கின்றதா என அன்று மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். ஆனால், இன்று கேஸும் இல்லை, கிழங்கும் இல்லை.
இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்தைகளுக்கும், வௌவால்களுக்குமா இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது?
முடிந்தால் மாகாண சபை அல்லது பொதுத்தேர்தலை நடத்திப் பாருங்கள். அரசு மீது மக்களுக்குள்ள நம்பிக்கை என்னவென்பது தெளிவாகத் தெரியவரும் என்றார்.
இணைந்திருங்கள்