சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷக்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷக்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்‌ஷக்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது. 

ராஜபக்‌ஷக்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயலர் உள்ளிட்டவர்களை பல தடவைகள் கொழும்புக்கு நேரடியாக அனுப்பி அறிவுறுத்தியும் வந்திருந்தது. ஆனாலும், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ, இந்தியாவின் அழுத்தங்களையும் அறிவுறுத்தல்களையும் கணக்கில் எடுத்திருக்கவில்லை. மாறாக, இந்தியாவை ஆத்திரப்படுத்தும் காரியங்களை சீனாவோடும், பாகிஸ்தானோடும் இணைந்து பல தருணங்களிலும் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவை ராஜபக்‌ஷக்கள் எவ்வளவுக்கு வெறுத்தார்கள் என்றால், தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு இந்தியா(வும்) முக்கிய காரணமென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் ராஜபக்‌ஷக்களின் முடிவு கவனிக்கத்தக்கது. அதுவும், இந்தியாவுடனான ராஜபக்‌ஷக்களின் இன்றைய உடல்மொழியே, தலைகீழாக மாறியிருக்கின்றது.

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா, கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார். இதன்போது, வழக்கத்துக்கு மாறாக ஜனாதிபதி நீண்ட விளக்கத்தை, இந்திய வெளியுறவு செயலாளரிடம் கொடுத்திருக்கின்றார்.

அந்த விளக்கங்களில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு நிலைப்பாடுகளுக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்காது, சீனாவுடனான தங்களின் உறவு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது; மற்றும், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு, உடனடியாகத் தீர்வு காணப்படும் என்கிற விடயங்கள் முக்கியமானவை. அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வழக்கத்துக்கு மாறாக கோட்டா, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துகளையே இம்முறை வெளியிட்டிருக்கின்றார். அதாவது, 13ஆவது திருத்தம் அவசியமில்லாத ஒன்று. அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்று, தென் இலங்கை முழுவதும் கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்கள் முழங்கி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், 13ஆவது திருத்தம் பலமும் பலவீனங்களும் கொண்டிருக்கின்றன. அதன் பலங்களை இனங்கண்டு கையாள வேண்டும் என்று கோட்டா கூறியிருக்கின்றார்.

இந்த விடயங்கள், இந்தியாவைக் குளிர்விக்க போதுமாவை என்பது, ராஜபக்‌ஷக்களின் எண்ணம். இந்தியாவைப் பொறுத்தளவில் வடக்கு – கிழக்கில் சீனாவின் கரங்கள் நீளாது இருப்பது முக்கியமானது. அந்த உத்தரவாதத்தை ராஜபக்‌ஷக்கள் வழங்கினாலே, அவர்களை அரவணைக்கத் தயாராக இருக்கின்றது. ஏனெனில், இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் சீனா கடன் பொறியினால் தன்னுடைய சேவகர்களாக மாற்றி வைத்திருக்கின்றது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் என்று இந்தியாவின் பெரும் எல்லைப்பகுதிகளைப் பகிரும் நாடுகளில் சீனாவின் முதலீடுகளும், கடன் உதவிகளும் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரித்திருக்கின்றது.

குறிப்பாக, 2015இல் ஏற்பட்ட நில அதிர்வினால் நேபாளம் சிதைவடைந்தது. 9,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். அதன் பின்னராக மீள்கட்டுமானத்துக்காக இந்தியாவின் உதவியை நேபாளம் எதிர்பார்த்தது. ஆனால், அதனை இந்தியா தட்டிக்கழித்த போது, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு சீனா, நேபாளத்துக்குள் நுழைந்தது. இன்றைய காத்மண்டுவின் பெரும் கட்டுமானங்கள் எல்லாமும் சீனாவின் உதவியுடன் நிகழ்ந்தவை. அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவைத் தாண்டிய நெருக்கத்தை, சீனாவோடு பேணுவதற்கு நேபாளம் தள்ளப்பட்டிருக்கின்றது.இப்படித்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இலங்கையையும் அதே பாணியிலேயே சீனா அணுகியது. கடன் பொறியை உருவாக்கும் சீனாவின் வல்லமை, இந்தியாவிடம் இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.

இந்தியப் பொருளாதாரம் என்பது, சில தனி மனிதர்களின் சாம்ராஜ்யத்தை முன்னேற்றும் அடிப்படைகளைக் கொண்டது. பிராந்திய இராஜதந்திர அணுகுமுறையிலும் கூட, அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே இந்திய ஆட்சியாளர்கள் முன்னிறுத்துவார்கள். அண்மையில், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டதும் அப்படித்தான். ஆனால், சீனா எந்தவொரு நாட்டில் முதலிட்டாலும், கடன் வழங்கினாலும் அதன் உரித்தினை சீன அரசே கொண்டிருக்கும். சீன நிறுவனங்களும் வங்கிகளும் அரசின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அங்கு தனி நபர்களை இராஜதந்திர கட்டமைப்புக்குள் உள்வாங்கும் அல்லது வளர்த்துவிடும் நோக்கம் இருப்பதில்லை. அதனால், சீனாவின் முதலீடுகளும் அதன் பின்னரான பிரதிபலன்களும் அரசினுடையதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், சீனாவுடனான ஒப்பந்தங்களை மீறுவதோ அல்லது முறித்துக் கொள்வதோ இன்னொரு நாட்டுக்கு பெரும் சிக்கலானது. இலங்கையில் சீனா முதலீடுகளும் கடன்களும் வேறு வேறு நிறுவனங்கள், வங்கிகளின் பெயர்களில் வழங்கப்பட்டாலும், அவை அனைத்தும் சீன அரசின் நேரடி நிறுவனங்களே.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் அனைத்து நாடுகளையும் சீனா கையாளத் தொடங்கிவிட்ட பின்னர், இலங்கையின் வடக்கு – கிழக்கை தன்னுடைய கரிசனையோடு பேண, இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்வருகிறார்கள் என்றால், இந்தியா அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். குறிப்பாக, அவர்களின் எந்த இழுப்புக்கும் இணங்கும். இதனால், பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழ் மக்களே.

இந்தியாவோடு உறவினைப் பேணுவது சார்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆர்வத்தோடு இருந்து வந்திருக்கின்றது. ஆனால், அந்த உறவு தென் இலங்கையில் தங்கள் மீதான நல்லெண்ணத்தை இல்லாமல் செய்துவிடாது இருக்க வேண்டும் என்று கருதி, இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் ஒரு வகையிலான சமநிலையைப் பேணவே விரும்பினார்கள்.

கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்கள் இந்தியாவுடனான வரையறையற்ற நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்பினாலும் சம்பந்தன், சுமந்திரனின் நிலைப்பாடுகளால் அது பெரியளவில் சாத்தியமாகியிருக்கவில்லை. உத்தரவாதங்கள், உறுதிப்பாடுகளற்ற எந்தவோர் இராஜதந்திர நகர்வும், தெளிவான செயற்பாடுகள் அல்ல என்கிற அடிப்படையில், சம்பந்தனின் அணுகுமுறை சரியானதுதான்.

ஆனால், இந்தியாவுக்கு சீனாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் சார்ந்து இந்தியா முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், கூட்டமைப்பைத் தாண்டி ராஜபக்‌ஷக்களுடனான நெருக்கத்தை இந்தியா பேண முயலும். இதனால், ‘அணிலை மரத்தில் ஏறவிட்ட நாயின் நிலை’க்கு தமிழ் மக்களின் நிலை வந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை தங்களது நலன்களுக்கான கருவியாகவே இந்தியாவும் மேற்கு நாடுகளும் இவ்வளவு காலமும் கையாண்டு வந்திருக்கின்றன. அவ்வாறானதொரு தருணமே மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களைக் காட்டி ராஜபக்‌ஷக்களை கையாள முயற்சித்த இந்தியா, இன்றைக்கு அவர்கள் இணக்கமான நிலை எடுத்ததும் தமிழ் மக்களை சில காலத்துக்கு தள்ளிவைக்கும் நிலையையே வெளிப்படுத்தும்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் அண்மைய வருகையின் போது, கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு அழைத்திருக்கின்றார். கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு ஏற்கெனவே அழைத்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. ஆனால், புதுடெல்லில் இருந்து அதற்கான நேரம் ஒதுக்கப்படவே இல்லை. கூட்டமைப்பினை ஒரு கட்டம் வரையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை வைத்தே கையாண்டு கொள்ளலாம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ராஜபக்‌ஷக்கள் இந்தியாவோடு முறுக்கிக் கொண்டிருந்த தருணத்திலேயே நிலைமை அப்படியிருந்தது. அப்படியான நிலையில், தற்போது இந்தியாவோடு நெருங்கிக் குழைய ராஜபக்‌ஷக்கள் தயாராக இருக்கும் போது, கூட்டமைப்பின் மீதான அணுகுமுறை என்பது இன்னும் கரிசனையற்ற ஒன்றாகவே இருக்கும்.

கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ்த் தரப்புகளை, இந்தியா உதிரிகளாகவே கருதுகின்றது. அதனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் சார்ந்து இராஜதந்திர நகர்வுகள் என்றால் அது கூட்டமைப்பின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றது. அதனால், தக்க தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்காது விடுத்து, வேண்டப்படாத தரப்பாக கூட்டமைப்பு தன்னை மாற்றிக் கொள்ளக் கூடாது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும்.