நாட்டு மக்களின் பாதுகாப்பு, தேசிய அபிவிருத்தி என்று கூறி ஆட்சிக்கு வந்த ராஜபக்சக்கள், மக்களைப் பொருளாதார ரீதியில் பாதாளக்குழிக்குள் தள்ளியுள்ளனர்.

நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களினால் மக்களின் வேதனைகளைப் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியமாகும்.

இந்த நிலையில் நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

நாட்டில் தற்போது கோவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளிலும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் கடன் நெருக்கடி நிலைமையை அடுத்தும் இறக்குமதி செய்யும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் பக்கத்திலிருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டும் வருகின்றது.

குறிப்பாகக் கடந்த மூன்று வாரங்களாக பால்மா தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் குழந்தைகள் கஷ்டப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய பால்மா வகைகள் சந்தைக்கு விடப்படுகின்ற போதிலும் பால்மாவை பெற்றுக்கொள்ள வெவ்வேறு நிபந்தனைகள் வியாபாரிகளினால் விதிக்கப்படுவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சிவில் அமைப்பினர் இந்த நிலைமைகளை அரச தரப்பிடம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் அரசாங்கமும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மத்திய கொழும்பு பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் வீதி ஓரத்தில் பால் சோறு சமைத்துச் சாப்பிட்டு, எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வீதியில் சென்ற மக்களுக்கும் பால் சோறு வழங்கியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,

“நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் விலை அதிகரித்துள்ளது. சமையலறைக்குச் சென்றால் சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை.

அரசாங்கத்தின் விலையேற்றத்தைச் சமையலறையில் உள்ள பெண்களே உணர வேண்டியுள்ளது என்று தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது விலையை அதிகரித்துவிட்டுத் தேர்தலின் போது விலை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஏன் இவ்வளவு மோசமான செயலில் இந்த ராஜபக்ச அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

தெற்காசியாவிலுள்ள எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இலங்கையிலேயே அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்களுக்கமைய, உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற தெற்காசிய நாடுகளின் விலைகள் இலங்கையை விட குறைவாக உள்ளன.

உண்மையில் இலங்கையில் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கின்ற காலப்பகுதிகளில் உணவுப் பொருட்களின் விலையேற்றமே அதிகமாக இருக்கும்.

மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் பாரிய ஏற்றம் காணப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரி-ரணில் ஆட்சி அமைந்த காலப்பகுதியில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றில் விலை குறைப்பு ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

இது மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் மீண்டும் ராஜபக்சக்களின் யுகத்திற்கு அதுவும் மக்களைப் பொருளாதார சுமைக்குள் தள்ளிவிட்டது.

உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான விலையேற்றம் என்பது அன்றாடம் காய்ச்சிகளான தினக்கூலிகளை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் பல குடும்பங்களில் ஒருவேளை உணவிற்கே பாதிப்பும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் திட்டமிடலில்லாத பொருளாதார கொள்கையினால் சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணிகள் எனப் பலரும் போசாக்கு குறைவினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப் புற சிங்கள மக்களும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்துவருகின்றனர்.

மூன்று வேளையும் நெல்லரிசி சாதத்தினை உணவாக உட்கொள்ளும் அவர்களுக்கு அரிசி மீதான விலையேற்றம் விசனத்தை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பியுள்ளது.

அரிசி, சீனி, மா, பால்மா, சமையல் எரிவாயு, உட்பட இறக்குமதி செய்யப்படும் சில தானிய வகைகளும் விலை ஏற்றத்தினை கண்டுள்ள நிலையில் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் கண்ட போதிலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்படத் தனியார்த் துறைகளில் பணியாற்றுபவர்கள் என யாருக்கும் சம்பள உயர்வு கிட்டவில்லை கிடைக்கப் போவதுமில்லை என்ற எண்ணப்பாடு மக்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலை தொடருமாயின் நாட்டு மக்கள் சகலரும் ஒன்றிணைந்து இந்த ராஜபக்ச ஆட்சியினை வீட்டுக்கு அனுப்பு நிலை ஏற்படும் என்பதே விலையேற்றத்தின் படிப்பினையாகவுள்ளது.