வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெளியேறிச் சென்றுள்ளார். 
இதன்போது அவரை மறித்து கேள்வி கேட்ட முற்பட்ட வவுனியா ஊடகவியலாளர்களை முன்னாள் ஜனாதிபதியின் மெய்பாதுகாவலர்கள் வழிமறித்து தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். 

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.02) இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாநாட்டிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிகழ்வு முடிவடைந்து மேடையில் இருந்து இறங்கி வெளியேறிச் சென்ற போது தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட முற்பட்டனர். 

இதன்போது மேடையில் பேசினேன் எனக் கூறிவிட்டு, கேள்விக்கு பதிலளிக்காது அங்கிருந்து அவர் நகர முற்பட்ட போது ஊடகவியலாளர்கள் சுற்றி வர வந்து கேள்வி கேட்டனர். இதன்போது அவரது மெய்பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்களை தமது கைகளால் தள்ளி, தள்ளு முள்ளில் ஈடுபட்டதுடன், முன்னாள் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து சென்றிருந்தனர். 

முன்னாள் ஜனாதிபதியின் பின் வந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்னாள் ஜனாதிபதி அவரசரமாக யாழ் செல்கிறார் எனத் தெரிவித்து ஊடகவியலார்களின் கேள்விகளுக்கு தான் பதில் அளிப்பதாக தெரிவித்தார். 

குறித்த விடயம் தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராவகன் அவர்களிடம் ஊடகவியலாளர் கேட்ட போது, கட்சியினுடைய செயலாளர் தயாசிறி ஜயசேகர நிற்கின்றார். அவர் கட்சியின் கருத்தை வெளியிடுவார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை கேட்டு எப்போதும் தீர்ப்பவர் அவர். ஏன் போனார் என நான் அறியவில்லை. ஒரு வேளை மலசல கூடத்திற்கு ஏதும் போக வேண்டி இருந்ததோ தெரியவில்லை. ஆனால் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் என்பவற்றை கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர அவர்களே வழங்குவது நடைமுறையில் உள்ளது எனத் தெரிவித்தார்.