ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற வேண்டுமென குறிப்பிட்டு சிலர் மறைமுக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி நேரத்தை விரயமாக்காமல் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியதே இப்போது முக்கியமானது.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம். கட்சித்தலை மையகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த உயர்பீடக் கூட்டத்தின்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித் திருக்கிறார்.

கட்சியின் தலைமைத்துவத்தினை மாற்ற வேண்டுமென சிலர் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தான செய்திகளை இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபித்துள்ள ஹக்கீம், தவறான புரிதல்களை கொண்டு சிலர் அப்படியான வேளைகளில் ஈடுபடுவதாகவும் நேரத்தை அப்படி வீணாக்காமல் கட்சியை பலப்படுத்துவது பற்றி சிந்திக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித்தலைமை பதவியை மாற்றுவது, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றியெல்லாம் இப்போதே அலட்டிக்கொள்ள தேவையில்லை. கட்சியை மேலும் பலப்படுத்தவேண்டியதே இப்போது முக்கியமானது. கட்சி இப்போது எந்த இடத்தில் இருக்கிறதென்பதை பார்க்கவேண்டும். அது எந்த இடத்தில் இருக்கிறதென்பது எவருக்கும் தெரியவில்லை. அதை பலப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ரவூப் ஹக்கீம்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த நிறைவேற்றத்திற்கு ஆதரவளித்த எம்.பி கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது. அதேசமயம் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் ஞானசார தேரருக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் கவனமாக எடுக்கவேண்டுமென இங்கு கட்சித் தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உயர்பீட கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.மன்சூர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான தவம், ஜெமீல் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை. ஹாரிஸ் எம்.பி. கூட்டம் நிறைவுறும் தறுவாயில் வந்தாரென அறியமுடிந்தது.