எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக 3.6 பில்லியன் டொலர் கடன் வழங்க ஓமான் நாடு இணங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார். இது சம்பந்தமான ஒப்பந்தம் விரையில் ஒப்பமிடப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த 20 வருடங்களாகும். கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 5 வருட சலுகைக் காலத்தையும் வழங்க ஓமான் அரசு இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதிய பணம் இல்லாமையால் நெருக்கடியில் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. தவிரவும், இதற்கு முன்பு விலைக்கு வாங்கிய எரிபொருளுக்காக அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ள கடணை பெற்றுக்கொள்வதிலும் கூட்டுத்தாபனம் நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஓமான் அரசு இணங்கியுள்ள கடன் தொகை கிடைக்காத பட்சத்தில் எரிபொருளுக்கான விலையை கட்டாயமாக அதிகரிக்க நேரிடுமென எரிபொருள் அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கிடையே எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல்வேறு சமயங்களில் அமைச்சரைக் கோரியிருந்தது. தற்போது ஒரு லீற்றர் பெற்றோலில் ரூ,18ம், ஒரு லீற்றர் டீசலில் ரூ.30ம் நட்டமடைவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமைச்சருக்கு நேற்று அறிவித்துள்ளார்.

ஓமான் அரசிடமிருநது; கிடைக்கவிருக்கும் 3.6 பில்லியன் கடன் தொகையானது ஒரு வருடத்திற்கு எரிபொருள் வாங்க போதுமானதாகும். இதற்கிடையே, இந்தியாவிடமிருந்தும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.