வர் ஒரு ஆபத்தான கம்யூனிஸ்ட்” என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகனால் வசை பாடப்பட்டவர்; “கமாண்டர் டேனியல்” என்று சக தோழர்களால் புகழப்பட்டவர்; கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் நேசத்திற்குரியவர்; 1979இல் அமெரிக்க கைக்கூலியாக இருந்த ஜனாதிபதி சமோஷா தலைமையிலான கொடிய சர்வாதிகார ஆட்சியை கம்யூனிச சித்தாந்தத்தின் மீது பற்றுக்கொண்ட சக தோழர்களைத் திரட்டி இராணுவத்திற்குள்ளேயே கலகம் செய்து முறியடித்து சாண்டினிஸ்டா எழுச்சி எனும் மாபெரும் புரட்சியை நடத்தி நிகரகுவாவை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து இடதுசாரி அரசியலின் பாதைக்கு திருப்பியவர் டேனியல் ஓர்ட்டேகா (Daniel Ortega) .  நான்காவது முறையாக நிகரகுவாவின் ஜனாதிபதியாக 75 சதவீத வாக்குகளை பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார். 

இதன் மூலம் 2027 ஆம் ஆண்டு வரை ஓர்ட்டேகா நிகரகுவாவின் ஜனாதிபதியாகத் தொடர்வார். அவர் தலைமையிலான சாண்டினிஸ்டா முன்னணி வெற்றி பெற்றதாக அந் நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா ஜனாதிபதி தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது. 65.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் ஆளும் சாண்டினிஸ்டா முன்னணி யின் ஜனாதிபதி வேட்பாளரான டேனியல் ஓர்ட்டேகாவும், துணை ஜனாதிபதி வேட்பாளரான ரொசாரியோ முரில்லோவும் 75.92 சதவீத வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட லிபரல் பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் 14.15 சதவீதம் வாக்குகளும், மூன்றாவதாக நிகரகுவா கிறிஸ்டியன் கட்சி 3.30 சதவீத வாக்குகளும் பெற்றன.   

நிகரகுவாவில் ஓர்ட்டேகா அரசுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு நாசகர நடவடிக்கைகளை ஏவிவிட்டது. அவர் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கு எண்ணற்ற இழி முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவற்றை நிகரகுவா மக்கள் தகர்த்து எறிந்துவிட்டார்கள் என்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என லத்தீன் அமெரிக்க அரசியல் அமைப்புகள் கூறுகின்றன. 

நிகரகுவாவில் டேனியல் ஓர்ட்டேகா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை சோசலிச கியூபாவின் ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல் வெகுவாக வரவேற்று, அந்நாட்டு மக்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். “நிகரகுவா தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் சாண்டினிஸ்டா புரட்சிக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ள பதிலடியாகும்” என்று தியாஸ் கேனல் குறிப்பிட்டுள்ளார்.  

நிகரகுவாவில் நவம்பர் 7 அன்று நடைபெற்ற இந்த ஜனாதிபதி தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று அமெரிக்காவின் வழிகாட்டுதல் படி செயல்படும் அமெரிக்க மாகாணங்கள் அமைப்பு (ஓஏஎஸ்) மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை வெற்றுக் கூப்பாடுபோட்டன. அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படும் கோஸ்டாரிகாவின் ஜனாதிபதி கர்லோஸ் அல்வர்டோ, நிகரகுவா தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளை சுட்டிக்காட்டி அவற்றை நிராகரிக்க வேண்டுமென்றும் திடீரென ஓர் அறிக்கை வாயிலாக கூக்குரலிட்டார். ஏகாதிபத்தியத்தின் இத்தகைய இழிவான அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் நிகரகுவா மக்கள்.

இதை தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, “அமெரிக்க ஏகாதியத்திமும் அதன் கூட்டாளியும் என்னதான் நிகரகுவா சாண்டினிஸ்டா புரட்சியினை சிறுமைப்படுத்த முயற்சித்தாலும், அந்தப் புரட்சி தான் 1979 க்குப் பிறகு அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்த புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சாண்டினிஸ்டா புரட்சியின் தலைவர்கள் நிகரகுவாவின் வளர்ச்சியில் மகத்தான பங்கினை ஆற்றியிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள மதுரோ, ஓர்ட்டேகா ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நிகரகுவா மக்களின் வறுமை 20.3 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது; இந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 23 பிரம் மாண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன; நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட மின் விநியோக தொகுப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது; நிகரகுவா மக்க ளின் ஊதியம் கணிசமான அளவிற்கு அதிகரித் துள்ளது என ஓர்ட்டேகா அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஓர்ட்டேகா மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை லத்தீன் அமெரிக்க நாடுகளின் வர்த்தக அமைப்புகளில் ஒன்றான ‘நமது அமெரிக்க மக்களின் பொலிவாரியன் கூட்டணி வர்த்தக உடன்பாடு’ மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. 1980 முதல் 2020 வரை 40 ஆண்டுகாலமாக நிகரகுவா வில் சமூக, பொருளாதார, அரசியல் சாதனைகள் பலவற்றை ஓர்ட்டேகா அரசு நிறைவேற்றிக் காட்டி யிருப்பதை இக்கூட்டணியின் பொதுச் செயலாளர் சச்சா லொராண்டி விவரித்துள்ளார்.