திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். தெளபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக வரவு – செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு விளக்கம் கோரி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கடந்த மாதம் 20ஆம் திகதி கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கூடியது.

இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தெளபீக் ஆகிய இருவர் மாத்திரமே அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய 3 உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் சுகயீனம் காரணமாக வரவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் 22ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் 22ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற்றபோது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்கு எதிராக வாக்களித்திருந்ததுடன் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தெளபீக் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

எனினும் ஏனைய 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக செயற்பட்டமைக்கு இரண்டு வாரங்களில் விளக்கம் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் நசீர் அஹமட் ஆகியோரை கட்சியில் இருந்து இடை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றபோது, ஏனைய 3 உறுப்பினர்களுடன் இணைந்து எம்.எஸ்.தெளபீக் ஆதரவாக வாக்களித்திருந்தார்.

அதன் காரணமாகவே இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கம் கோரி, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் கடிதம் அனுப்பியுள்ளார்.