இலங்கை அமைச்சரவையில் மாற்றம் எதிர்வரும் 10-01-2022ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது விவசாயத்துறை உட்பட பல முக்கிய இலாகாக்கள் மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, காணி அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) விவசாய அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

அனுராதபுரத்தில் பல கரிம உரத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன. அவரது திட்டங்கள் அரசின் சிறப்புப் பாராட்டைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், புதிய வருடத்தில் புதிய பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அந்த பயணத்திற்கு தூண்டுகோலாக அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு சுசில் பிரேமஜயந்தவுக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

இதையடுத்து, முடிவடைந்த நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18-01-2022 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.