y. Alex Lantier, Johannes Stern
ரஷ்யப் படைகள் உக்ரேன் இலக்குகள் மீது குண்டுவீசி, உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள அதிவலது ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யா மீது ‘மிகப் பாரியளவில், மிகவும் வலுவான’ பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டதாக வியாழன் இரவு பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் அறிவித்தார். கூடுதலாக 7,000 அமெரிக்க துருப்புக்களை வாஷிங்டன் ஜேர்மனிக்கு அனுப்பிய நிலையில் இது நடந்தது, ரஷ்யா மற்றும் உக்ரேனின் மேற்கு எல்லைகள் முழுவதும் நேட்டோ கூட்டணி அதன் படைகளைக் கட்டமைத்துள்ளது.

வியாழன், பிப்ரவரி 24, 2022, புருஸெல்ஸில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் கட்டிடத்தில் உக்ரேனில் நடைபெறும் அசாதாரண ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் ஒரு வட்ட மேசைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடினர். (Olivier Hoslet, Pool Photo via AP)

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ஒரு பரந்த போரைத் தவிர்க்க முயல்வதன் மூலமாக அல்ல மாறாக ரஷ்யா மீது பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதன் மூலமாகவும், பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே நேரடியாக ஓர் உலகளாவிய போர் தீவிரமடையும் அபாயத்தை ஆழப்படுத்துவதன் மூலமாகவும் உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்களுக்கு தெளிவாக விடையிறுத்து வருகின்றன.

ரஷ்ய எரிசக்தி மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ‘இரட்டை பயன்பாட்டு’ பொருட்கள் என்று அழைக்கப்படுபவை, அதாவது நேரடியாக இராணுவத்திற்குப் பயன்படுத்தப்படும் படைத்துறைசாரா பண்டங்களின் வர்த்தகம் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய தடைகள் இலக்கில் வைக்கும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய பிரஜைகளுக்கு நுழைவனுமதி வழங்குவதையும் நிறுத்துகிறது மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நிதிய சொத்துக்களை இலக்கில் வைத்து புதிய தடையாணைகளுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய சொத்துக்கள் மற்றும் சொத்துடைமைகள் பறிமுதல் செய்யப்பட உள்ளன, ரஷ்ய வங்கிகளும் ரஷ்ய அரசும் ஐரோப்பாவில் நிதி பரிவர்த்தனைகள் செய்வதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட உள்ளன.

ஜேர்மனி, இத்தாலி மற்றும் சைப்ரஸ் உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், வங்கிகளுக்கிடையேயான SWIFT பரிவர்த்தனை முறையை ரஷ்யா அணுகுவதற்கு இடைக்கால தடைவிதிப்பதற்கான அழைப்புகளை எதிர்த்தன, இது அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்தும் ரஷ்யாவின் ஆற்றலைத் தடுத்து, பெரும்பாலான சர்வதேச நிதிச் சந்தைகளில் அதை முடக்கிவிடும். ஆனால் இந்த அச்சுறுத்தல் குறித்து கேட்ட போது, ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ், அது இன்னும் ஒரு விருப்பத் தெரிவாக வைக்கப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்தினார், ‘பின்வரும் காலங்களுக்கும் பொருளாதாரத் தடைகளை நாம் தயாராக வைத்திருக்க வேண்டியுள்ளது,’ என்றார்.

‘அணுசக்திக்கு நிகரான விருப்பத் தேர்வாக’ நிதியியல் பத்திரிகைகளில் விவரிக்கப்படும், SWIFT முறையை ரஷ்யா அணுகுவதற்கு இடைக்காலத் தடைவிதிப்பது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முற்றுமுதலாக ரஷ்யா உடனான எரிசக்தி மற்றும் வர்த்தக முடக்கத்தால் அச்சுறுத்தப்படுகிறது, ரஷ்யா அதன் இயற்கை எரிவாயுவில் 20 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்குகிறது. இது உலக பொருளாதாரத்திற்கே பேரழிவுகரமான அடியாக இருக்கும் என்பதோடு, இது ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் எரிசக்தி விலைகள் வெடிப்பார்ந்து அதிகரிக்கத் தூண்டும். அதற்கும் மேலாக, இது ஏற்கனவே தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் மற்றும் உலக வர்த்தகத்தின் ஒரு பொறிவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பணவீக்கத்தை பாரியளவில் தீவிரப்படுத்தும்.

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பானது, ஐரோப்பிய ஊடகங்களின் பரந்த அடுக்குகள் அதை முன்வைப்பது போல், வெறுமனே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் சூழ்ச்சியின் விளைவு அல்ல என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு கிரெம்ளினின் அதன் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான தேசியவாத பிரதிபலிப்பாகும். ஆனால் உலகளவில் இராணுவ ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் வலுவான நிலையில் உள்ள நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் தான் மிகவும் ஆக்ரோஷமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்துவதை விரைவுபடுத்த நேட்டோ கூட்டணி வெளியில் குறிப்பிடாத அவசரகால திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நேற்று, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் கூறுகையில், ‘எங்கள் உயர்மட்ட இராணுவத் தளபதி ஜெனரல் டோட் வோல்டர்ஸ் வேண்டுகோளின் பேரில் எங்கள் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வடக்கு அட்லாண்டிக் கவுன்சில் இன்று முடிவு செய்துள்ளது. … [இது] நேட்டோ விடையிறுப்புப் படைகள் உட்பட திறன்கள் மற்றும் படைகளை அவை தேவைப்படும் இடத்திற்கு அனுப்ப எங்களுக்கு உதவும்,’ என்றார்.

நேட்டோ விடையிறுப்பு படை என்பது பல நேட்டோ நாடுகளின் துருப்புக்களைக் கொண்ட 40,000 வலிமையான விரைவு பதிலடிப் படையாகும், இது கூட்டணியின் நெருக்கடி எதிர்வினை நடவடிக்கைகள் திட்டத்தின் (Crisis Reaction Measures plan) பாகமாக நிலைநிறுத்தப்படுகிறது. இந்தப் படையின் ஒரு பகுதியாக 5,000 பேர் கொண்ட பிராங்கோ-ஜேர்மன் படைப்பிரிவு ஏற்கனவே அதிக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனும் உயர் எச்சரிக்கை நிலையில் கூடுதலாக 7,000 அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனிக்கு அனுப்புவதாக அறிவித்தது, லாத்வியாவுக்கு 300 துருப்புகள், எஸ்தோனியா மற்றும் லித்துவேனியாவுக்கு F-35 போர் விமானங்களும் அனுப்பப்படுவதாக அறிவித்தது.

அனைத்திற்கும் மேலாக ஐரோப்பிய அரசாங்கங்களை குறிப்பிட்டுக் கூறாத அவசரகால நடவடிக்கைகளை எடுக்க, நேட்டோ கேட்டுக் கொள்கின்ற அதேவேளையில், நேட்டோ நாடுகளைத் தொலைநோக்குடன் இராணுவமயப்படுத்துவதும் நடந்து வருகிறது.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது: ‘தற்போதைய நிகழ்வுகள் காரணமாக, நெருக்கடி ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் பட்டியலாக, நெருக்கடி விடையிறுப்பு நடவடிக்கைகளை எடுக்க நேட்டோ அதன் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. … நேட்டோவின் விரைவான பதில் நடவடிக்கைகளின் அடிப்படையில், [ஜேர்மன்] கூட்டாட்சியின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இப்போது தேசிய எச்சரிக்கை நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுவதை எடுத்துள்ளது.” “அடுத்த சில நாட்களில் பொது இடங்களில் அதிக இராணுவ நடமாட்டத்தை மக்கள் கவனிக்கலாம். இராணுவ தேவைகளுக்காக தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து இருக்க வேண்டும் என்பதால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் இருக்கலாம்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

உக்ரேனின் மேற்கு எல்லை மீதான ரஷ்ய படையெடுப்பிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தப்பியோடி வரும் ஆயிரக்கணக்கான உக்ரேனிய அகதிகளைக் கையாள துருப்புக்களை நிலைநிறுத்துவதற்காக போலாந்து, சுலோவாக், ஹங்கேரிய மற்றும் ருமேனிய அதிகாரிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பிரதான நேட்டோ சக்திகள் ரஷ்யாவை இலக்கில் வைத்து, ஒரு இராணுவ விரிவாக்கத்திற்கு தயாராகி வருகின்றன என்பது வெளிப்படையாக உள்ளது, இது உலகளாவிய அணுஆயுத மோதல் வெடிப்பை அச்சுறுத்துவதுடன் அத்துடன் உள்நாட்டில் அவசரகால நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும். ஏற்கனவே இது போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் ‘போர்க்குழுக்கள்’ என்று அழைக்கப்படுவது நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அவை இப்போது ருமேனியா, பல்கேரியா, சுலோவாக்கியா மற்றும் ஹங்கேரியிலும் நிலைநிறுத்தப்படுகின்றன. லு திரியோன் அவரே விபரங்கள் எதுவுமின்றி ரஷ்யாவை எச்சரித்தார்: ‘நேட்டோவும் ஒரு அணுஆயுதக் கூட்டணி தான்,’ என்றார்.

இந்த மோதலில், பிரதானமாக ஆக்ரோஷமாக இருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளே ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததில் இருந்து ரஷ்யாவை சுற்றி வளைக்க அவை திட்டமிட்டு உழைத்துள்ளன. சிரியா மற்றும் மத்திய கிழக்கில் நேட்டோ பினாமி போர்களுக்கு மாஸ்கோ ஒரு தடையாக வெளிப்பட்ட பின்னர், வாஷிங்டனும் பேர்லினும் கியேவில் ரஷ்ய-விரோத ஆட்சியை நிறுவ ஸ்வோபோடா கட்சி மற்றும் ரைட் செக்டர் (Right Sector) போன்ற பாசிச சக்திகளின் தலைமையில் கியேவில் ஒரு சதியை ஏற்பாடு செய்தன. அதற்குப் பின்னர் இருந்து, நேட்டோ ரஷ்யாவை சுற்றி சுருக்குக்கயிறை இறுக்கி உள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை நிராகரிக்கிறது மற்றும் எதிர்க்கிறது, ஏனெனில் இது ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ தாக்குதலைத் தடுக்காது மாறாக மூன்றாம் உலகப் போர் ஆபத்தை ஆழப்படுத்தும். ஆனால் புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான ரஷ்ய தேசியவாதத்திற்கு அதன் எதிர்ப்பானது, ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய சக்திகளின் பிரச்சாரத்தை நியாயப்படுத்த அவை பயன்படுத்தும் பொய்கள் மற்றும் பாசாங்குத்தனங்களுக்கு அது கொண்டுள்ள சற்றும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

ஒவ்வொரு வாரமும் ஐரோப்பா முழுவதும் இன்னமும் 20,000க்கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்டு வரும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான எல்லா பொது சுகாதார நடவடிக்கைகளையும் ஐரோப்பிய சக்திகள் நீக்குவதற்கு நகர்ந்து வரும் அதே வேளையில், அவை நீண்டகால எதிர்நோக்கி வந்த அவற்றின் மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த விரைகின்றன. அனைத்திற்கும் மேலாக, இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு காட்டுமிராண்டித்தனமான நிர்மூலமாக்கல் போரை நடத்திய ஜேர்மன் ஆளும் வர்க்கம், ஜேர்மனியில் ஒவ்வொரு நாளும் 200,000 க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டாலும் கூட, தாக்குதலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வியாழக்கிழமை ஓர் அசாதாரண அறிக்கையில், ஜேர்மன் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அல்ஃபோன்ஸ் மைஸ், ரஷ்யாவுக்கு எதிராக பாரியளவில் மீள்ஆயுதமயப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தார். “எனது 41 ஆண்டு கால சேவையில் நான் இன்னொரு போரை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனக் கருதியதில்லை. நான் தலைமை தாங்கும் செல்வாக்கு பெற்றுள்ள இராணுவமான ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வெறுங்கூடாக உள்ளது,” என்று LinkedIn வலையமைப்பில் எழுதினார். ‘கூட்டணியை ஆதரிக்குமாறு அரசியல்வாதிகளுக்கு நாங்கள் வழங்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன,’ என்றார்.

‘இது சரியில்லை! எரிச்சலாக உள்ளது!’ என்று சீறிய மைஸ், ஆயுதப்படையை ‘கட்டமைப்பு ரீதியாகவும் சடரீதியாகவும் … மறுசீரமைக்க’ ‘இதுவே சரியான நேரம்,’ என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஊடகங்கள் பிரச்சார மனோநிலையில் உள்ளன, போரின் புதிய சகாப்தம் படைகளைத் தழுவ அழைப்பு விடுப்பதாக அவை வலியுறுத்துகின்றன. ‘பனிப்போர் முடிவடைந்த பின்னர் இந்த கண்டத்திற்கு ஒப்பீட்டளவில் மூன்று தசாப்தங்களாக பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை வழங்கிய ஐரோப்பிய ஒழுங்கு உடைந்து வருகிறது. ஒரு புதிய, ஆபத்தான சகாப்தம் தொடங்குகிறது,’ என்று Der Spiegel எழுதியது, அத்தகைய நேரங்களில், ‘வாழ்நாள் முழுவதும் கூறி வந்த சில விருப்பமான பொய்களுக்கு ஒருவர் விடை கொடுக்க’ வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. ‘எல்லா மோதல்களும் இணங்க வைப்பதன் மூலம் தீர்த்து விடலாம் என்ற அனுமானமும்’ இதில் உள்ளடங்கும்.

பேசாதே, மாறாக சண்டை செய்! என்பது தவறுக்கிடமின்றி உள்ளது. Der Spiegel தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறது, “21 ஆம் நூற்றாண்டு அரசியலில் இராணுவமும் ஒரு காரணியாக இருக்கிறது என்ற கருத்தை ஐரோப்பியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார புள்ளிவிபரங்கள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் மட்டுமே தேசங்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று பலர் நினைத்தார்கள். ரஷ்யப் படையெடுப்பைச் சிறிது பாராட்டுவது போல தெரிந்தாலும், ‘டாங்கிகள், போர் விமானங்கள், பீரங்கிகள் போன்ற பல தொன்மையான வழிவகைகளைக் கொண்டும் அரசியல் செய்ய முடியும்’ என்பதை புட்டின் எடுத்துக் காட்டி வருவதை இது உற்சாகப்படுகிறது,” என்று குறிப்பிட்டது.

ஆளும் வர்க்கம் இந்த புவியைப் படுபாதாளத்திற்குள் தள்ளுவதில் இருந்து தடுக்க, போர், சமூக சமத்துவமின்மை மற்றும் இந்த பெருந்தொற்றில் பாரிய நோய்தொற்றுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு கொண்டு வழங்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்’ என்ற அதன் அறிக்கையில் விவரித்தவாறு, எல்லா முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் போராடும் ஒரு போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே தலையாய பிரச்சினையாக உள்ளது.